“டாக்டர் மகாதீர் நிர்வாகம் 38 உலக வங்கிக் கடன்களை பெற்றது”

மலேசியா 1982ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை ( உலக நிதி நெருக்கடிக்கு பிந்திய காலம்) உலக வங்கியிடமிருந்து 38 கடன்களை பெற்றுள்ளதை அந்த உலக நிதி நிறுவனத்தின் பதிவேடுகள் காட்டுகின்றன.

அதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பெறும் ‘பொருளாதார மீட்சிக்கும் சமூகத் துறைக்குமான கடன் திட்டமும்’ அடங்கும். அந்தக் கடனுக்கான ஒப்பந்தம் 1998ம் ஆண்டு ஜுன் மாதம் 18ம் தேதி கையெழுத்தானது.

மகாதீர் நிர்வாகத்துக்கும் உலக வங்கிக்கும் இடையில் கடைசியாக 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி மூன்று கடன்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் மொத்த மதிப்பு 404 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

கல்வித் துறை ஆதரவுத் திட்டம் ( 244 மில்லியன் டாலர்), 2000ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப உதவித் திட்டம் (100 மில்லியன் டாலர்) சமூகத் துறை ஆதரவுத் திட்டம் (60 மில்லியன் டாலர்)  என்ற அந்த மூன்று ஒப்பந்தங்களும் துணைப் பிரதமர், நிதி அமைச்சர் பொறுப்புக்களிலிருந்து அன்வார் நீக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் கையெழுத்தாகியுள்ளன.

உலக வங்கியிடமிருந்து கடன் வாங்குவதை தாம் எதிர்த்ததாக முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொள்வதை மறுக்கும் பொருட்டு உலக வங்கி பதிவேடுகளை பிகேஆர் தொடர்புப் பிரிவு இன்று வெளியிட்டது.

1999ம் ஆண்டு நிதிகளுக்காக அந்த முன்னாள் பிரதமர் உலக வங்கிக்குக் கடிதம் எழுதியதாக அன்வார் கூறியதைத் தொடர்ந்து மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையில் தகராறு மூண்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கினால் மலேசியா அதற்கு அடிமையாகி விடும் என வாதாடிய மகாதீர், அந்தக் கடிதங்களை காட்டுமாறு அன்வாருக்கு நேற்று சவால் விடுத்தார்.

‘டாக்டர் மகாதீர் பொய் சொல்கிறார் என்பதற்கு ஆதாரம்’

மகாதீர் பொய் சொல்வதை உலக வங்கி பதிவேடுகள் காட்டுவதாக பிகேஆர் தொடர்புப் பிரிவு கூறியது.

“மகாதீர் நிர்வாகத்தில் உலக வங்கி மலேசியாவில் ஈடுபாடு கொண்டிருந்ததை அந்தப் பதிவேடுகள் தெளிவாகக் காட்டுகின்றன,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அன்வாருக்கு உலக வங்கி, அனைத்துலகப் பண நிறுவனம் ஆகியவற்றுடன் உள்ள தொடர்புகள் காரணமாக அவர் அம்னோ ஏஜண்ட் என அம்னோ தலைவர்கள் அடிக்கடி குற்றச்சாட்டுவதை மறுக்கும் பொருட்டு மகாதீருக்கு எதிராக அன்வார் அந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மேற்கத்திய நண்பர்களை திருப்திப்படுத்துவதற்காக ஆசிய நிதி நெருக்கடி உருவான பின்னர் மலேசியாவின் பொருளாதார மறு வாழ்வுக்கு அனைத்துலக பண நிறுவனக் கடனைப் பெறுவதற்கு அன்வார் தீவிரம் காட்டினார் என 1998ம் ஆண்டு அன்வாரை நீக்கிய போது மகாதீர் காரணம் கூறினார்.

மலேசியாவுக்கு உலக வங்கியின் நிதி தேவை இல்லை என 1993ம் ஆண்டிலேயே தாம் அந்த வங்கிக்குக் கடிதம் எழுதியதாக அன்வார் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

“அது முரண்பாடாக இல்லையா? உலக வங்கியை நம்பியிருந்தாக கூறப்படும் அன்வார் அந்த வங்கியிடமிருந்து கடன் வாங்குவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஆனால் அனைத்துலக பண நிறுவனத்தையும் உலக வங்கியையும் எதிர்க்கும் ஒருவர் மௌனமாக நிதிகளை அவற்றிடமிருந்து கோரினார்,” என அன்வார் சொன்னார்.

TAGS: