நஷாருதின்: பாஸ் அரசியல் ஆதாயத்துக்காக இஸ்லாத்திலிருந்து விலகிச் செல்கிறது

பாஸ் கட்சி அரசியல் ஆதாயத்துக்காக தனது இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதாக அதன் முன்னாள் துணைத் தலைவர் நஷாருதின் மாட் ஈசா கூறுகிறார்.

பாஸ் இஸ்லாத்துக்கு இணங்க நடந்து கொள்ள வேண்டும். திருக்குர்-ஆன், ஹதிஸ் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தனது நிலையிலிருந்து விலகக் கூடாது என அவர் பெரித்தா ஹரியானின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பான பெரித்தா மிங்குவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பாஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஹுடுட் விஷயத்ததை பின்னுக்குத் தள்ளுவது என எடுத்துள்ள முடிவை மறைமுகமாக குறிப்பிட்ட நஷாருதின் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சொற்களை மாற்றக் கூடாது என்றார்.

“பாஸ் கட்சி சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதாக வெளியில் உள்ளவர்கள் எண்ணுகின்றனர். அது ஆபத்தானது.”

அரசியல் என்று வரும் போது ஒரளவு நீக்குப் போக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த சமயத்தின் தூண்களையே விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

கட்சிக் கூட்டங்களில் பேசப்படும் விஷயங்கள் இப்போது நான்கு சுவர்களுக்குள் ரகசியமாக இருப்பதில்லை என்றும் நஷாருதின் குறிப்பிட்டார்.

“மத்தியக் குழுக் கூட்டம் முடிந்த ஐந்தாவது நிமிடம். எல்லாத் தகவல்களும் வெளியில் கசிந்து விடுகின்றன. காரணம் கூட்டத்தில் பேசப்பட்டதை வெளியில் விவாதிப்பதாகும்.”

“அது நல்லதல்ல. சில விஷயங்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்”, எனக் குறிப்பிட்ட அவர், எடுத்துக்காட்டுக்கு அடுத்த தேர்தலில் தாமும் ஹசான் அலியும் போட்டியிடும் விவகாரம் பிரச்னையானதைச் சுட்டிக் காட்டினார்.

“கட்சித் தலைவர் முடிவு செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி மத்திய தலைமைத்துவத்தில் இல்லாதவர்கள் அறிக்கை விடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.”

“உண்மையில் யார் வேட்பாளர், யார் நீக்கப்படுவார்கள் என்பது குறித்த அறிக்கைகளைக் கண்டு தலைவர் அப்துல் ஹாடி அவாங்கே அதிர்ச்சி அடைந்துள்ளார்.”

“அதனால் பாஸ் கட்சி குறை கூறப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் கூட குறை கூறுகின்றனர்,” என பாஸ் கட்சிக்கு மூன்று தவணைகளுக்கு துணைத் தலைவராக இருந்த நஷாருதின் சொன்னார்.

.

TAGS: