உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா சரமாரி தாக்குதல்- அணுமின் நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் தாக்குதல்.

உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், இன்று மைகொலெய்வ் நகரம் மற்றும் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கி உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த சில வாரங்களாக மைகோலெய்வின் இரண்டு மாவட்டங்களை குறிவைத்து இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உக்ரைன் அரசு கூறி உள்ளது.

 

 

-mm