சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் எங்களுக்கு ஆசை இல்லை என்கிறது டிஏபி

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு டிஏபி குறி வைத்துள்ளதாக கூறப்படுவதை அந்த மாநில டிஏபி தலைவர் தெரெசா கோக் நிராகரித்துள்ளார்.

மாநிலத்தில் இட ஒதுக்கீடுகளைப் பார்த்தால் மாநில அரசாங்கத் தலைமைத்துவத்தை டிஏபி கோருவது இயலாத காரியம் என்பது தெரிய வரும் என அவர் சொன்னார்.

அவர் இன்று ஷா அலாமில் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த நிருபர்கள் சந்திப்பில் பேசினார்.

“நீங்கள் 2008 பொதுத் தேர்தலை எடுத்துக் கொண்டால் சிலாங்கூரில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 15ல் மட்டுமே டிஏபி போட்டியிட்டது. அந்த மாநிலத்தில் உள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் நான்கில் மட்டுமே அது வேட்பாளர்களை நிறுத்தியது.”

“ஆகவே சிலாங்கூரில் டிஏபி-யின் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவியை டிஏபி விரும்புகிறது எப்படிச் சொல்ல முடியும் என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன், அது நிச்சயம் முடியாத காரியம்,” என்றார் அவர்.

சிலாங்கூரில் இட ஒதுக்கீடுகள் குறித்து பேசிய கோக், பக்காத்தான் மாநிலத் தலைமைத்துவம் வெகு காலத்துக்கு முன்பே இறுதி முடிவு செய்து விட்டது எனத் தெரிவித்தார்.

மலாய் பெரும்பான்மைத் தொகுதிகளில் தனது மலாய் வேட்பாளர்களை நிறுத்த டிஏபி தொடக்கத்தில் வேண்டுகோள் விடுத்தது பற்றிக் குறிப்பிட்ட சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் காலித் சாமாட், அந்த விருப்பத்தின் நோக்கம் டிஏபி-யின் “சீன தோற்றத்தை” கைவிடுவதற்காகும் எனக் கூறினார். மாநிலத்தின் உயர்ந்த பதவிக்கு குறி வைப்பது நோக்கமல்ல என்றார் அவர்.

TAGS: