என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரம் தொடருகிறது. அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்று சொந்தமாக உள்ளது என பிகேஆர் இன்று தகவல் வெளியிட்டது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடக்கம் அந்தோனி ரோட்டில் உள்ள ஆர்ச்சட்ஸ் ஸ்காட்ஸ் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் ஒரு வீட்டை வைத்திருப்பதற்கான ஆவணங்களை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் வழங்கினார்.
“சிங்கப்பூர் மறுமேம்பாட்டு வாரியத்தின் பதிவேடுகளின் படி அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீடு 4.1 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு வாங்கப்பட்டது. அதன் அளவு 2,282 சதுர அடியாகும். சிங்கப்பூரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளுடன் ஒப்பிடுகையில் அது அதிகமான பரப்பளவைக் கொண்டதாகும்,” என அந்த மாச்சாங் எம்பி சொன்னார்.
சிங்கப்பூர் நில வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ சோதனைகளின் போது அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில், அவர்களது பிள்ளைகளான வான் ஷாஹினுர் இஸ்ரான் முகமட் சாலே, வான் இஸ்ஸாஅனா பாத்திமா முகமட் சாலே ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களும் இன்று நிருபர்களுக்கு வழங்கப்பட்டன.
அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதா அல்லது சொந்த உபயோகத்துக்காக வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனைகளுடன் கூடிய 250 மில்லியன் ரிங்கிட் கடனைக் கொண்டு அமைக்கப்பட்டு ஷாரிஸாட் குடும்பத்தினர் நடத்தி வரும் தேசிய விலங்குக் கூட நிறுவனத் திட்டம் “குளறுபடியாக” இருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறிய பின்னர் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் கடுமையாக குறை கூறப்பட்டு வருகிறார்.
கோலாலம்பூர் பங்சாரில் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்குவதற்கு அந்தக் கடனில் ஒரு பகுதியை ஷாரிஸாட் குடும்பம் பயன்படுத்தியுள்ளதை பிகேஆர் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் அது முதலீட்டு வியூகம் என என்எப்சி நிராகரித்துள்ளது.
அந்த வீடு என்எப்சி-யின் துணை நிறுவனமான என்எல்எம்சி என்ற National Livestock and Meat Corporationக்கு சொந்தமாக உள்ளது.
சிங்கப்பூருக்குப் பணம் சென்றது
சிங்கப்பூர் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டை வாங்குவதற்கு என்எப்சி கடன் பயன்படுத்தப்பட்டதா என்பதை பிகேஆர் காட்ட முடியவில்லை என்றாலும் அந்தக் குடும்பத்தின் நிதி ஆற்றலும் பின்னணியும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சைபுதின் குறிப்பிட்டார்.
அந்த குடும்பத்துக்குச் சொந்தமான மலேசிய, சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இடையிலான ‘பற்று வரவு’ பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.