நிதி நெருக்கடியின் தாக்கத்தை சமாளிப்பதற்கு 1999ம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து மலேசியா கடன்களை வாங்கியிருப்பதை அரசாங்கப் பதிவேடுகள் காட்டுவதை பிகேஆர் இன்று சுட்டிக் காட்டியுள்ளது.
2010ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கான இணைப்புப் பகுதிகளை மேற்கோள் காட்டிய பிகேஆர் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி இஸ்மாயில், உலகப் பொருளகத்திடமிருந்து தமது அரசாங்கம் கடன்களையே பெறவில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பொய் சொன்னார், தொடர்ந்தும் பொய் சொல்கிறார் என்பதை அது காட்டுவதாக தெரிவித்தார்.
“நாங்கள் வழங்கிய உலக வங்கி ஆவணங்களுடைய உண்மை நிலை குறித்து வேண்டுமானால் அவர் கேள்வி எழுப்பலாம். நான் உலக வங்கியின் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆவணங்களின் உண்மை நிலையை உறுதி செய்யுமாறு அந்த வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். “
“ஆனால் மகாதீர் மலேசிய அரசாங்கம் வெளியிட்ட அதிகாரத்துவ நிதி ஆவணங்களை மறுக்க முடியாது,” என்றார் அவர்.
2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சமர்பித்த 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, அரசாங்கம் 1999ம் ஆண்டு அந்த உலக வங்கியிடமிருந்து சமூகத் துறைக் கடனைப் பெற்றுள்ளது தெரிய வருகிறது.
“2008ம் ஆண்டு அதன் வட்டி விகிதம் 7.4 விழுக்காடு ஆகும். 1999ம் ஆண்டு பெறப்பட்ட அந்த 60 மில்லியன் ரிங்கிட் கடனில் 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வாக்கில் இன்னும் 701,040 ரிங்கிட் 14 சென்-னை மலேசியா கொடுக்க வேண்டியிருந்தது” என ராபிஸி சொன்னார்.
“மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் அவரது அரசாங்கம் அந்த ஆவணத்தை அங்கீகரித்துள்ளது”,
‘அந்த பெரிய பொய்க்காக மன்னிப்புக் கேளுங்கள்’
உலக வங்கியிடமிருந்து அத்தகைய கடன்கள் எதுவும் பெறப்படவில்லை என்றும் அதன் உதவியை நிராகரித்த பின்னர் அத்தகைய கடன்களை தாம் அங்கீகரித்ததாகக் கூறுவது அபத்தம் என்றும் மகாதீர் நேற்று வலியுறுத்தினார். அதற்கு ராபிஸி இன்று பதில் அளித்தார்.
முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் அனைத்துலக பண நிறுவனம் தயாரித்த மீட்புத் திட்டத்தை ஆதரித்த ‘அந்நிய ஏஜண்ட்’ என்றும் மகாதீர் கடந்த பத்து ஆண்டுகளாக சித்தரித்து வருகிறார்.
1998ம் ஆண்டு அன்வாரை நீக்கிய பின்னர் நிதி அமைச்சர் பொறுப்பையும் மகாதீர் ஏற்றுக் கொண்டார்.
அந்நிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை வாங்கினால் மலேசியா அவற்றுக்கு ‘அடிமைப்பட வேண்டும்’ எனக் கூறிய மகாதீர் அரசாங்கம் உண்மையில் உலக வங்கியிடமிருந்து பல கடன்களைப் பெற்றுள்ளதாக கடந்த வாரம் அன்வார் தகவல் வெளியிட்டார்.
பிகேஆர் ஏன் அந்த விஷயத்தை இப்போது எழுப்புகிறது என நேற்று கேள்வி எழுப்பிய மகாதீர், பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வாறு செய்வதாக குறிப்பிட்டார்.
“1999ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று சூழ்நிலைகள் வேறாகும். இப்போது எல்லா அதிகாரத்துவ ஆவணங்களும் இணையத்தில் பகிரங்கமாக கிடைக்கின்றன. நீங்கள் எளிதாக் உண்மைகளை உறுதிப்படுத்த முடியும். அவர் பொய் சொல்கிறார். நாங்கள் சோதனை செய்து அந்த ஆவணங்களை கண்டு பிடித்தோம்,” என ராபிஸி சொன்னார்.
இந்த அரசியல் பந்தாட்டத்தை தொடருவதற்குப் பதில் 80 வயதைத் தாண்டியுள்ள மகாதீர் மலேசிய மக்களிடம் தாம் சொன்ன பெரிய பொய்க்காக “உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும் ராபிஸி கூறினார்.