நெருக்கடியில் சிக்கியிருக்கும் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, அம்னோ வலைக்குள் தாம் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறுவதை மெய்பிக்குமாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலிக்கு சவால் விடுத்துள்ளார்.
முஸ்தாபாவின் குற்றச்சாட்டுக்கள் “அகங்காரமானது” என்றும் “அவதூறு என்ற நெருப்புடன் விளையாடுவது” என்றும் ஹசான் வருணித்தார். கூடிய விரைவில் கீழே கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு முஸ்தாபா பதில் அளிக்க வேண்டும் என அவர் அவர் விரும்புகிறார்.
1 அவர் அம்னோ வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.
.2 பாஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் அம்னோ திட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டுள்ளார்.
“கட்சியின் மிகவும் மூத்த தலைவர் என்ற முறையில் முஸ்தாபா எனக்கு எதிராக தீய நோக்கத்துடன் பாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளார்,” என இன்று கோலாலம்பூரில் தமது இல்லத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
“தலைமைச் செயலாளர் என்ற தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்தாபா அபத்தமாக பேசுகிறார், அவதூறு கூறுகிறார்,” என்றார் ஹசான்.
முஸ்தாபா தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விவேகத்தையும் இழந்து விட்டார் என்றும் ஹசான் சாடினார்.
சிலாங்கூர் பாஸ் தலைவராக தாம் மீண்டும் நியமிக்கப்படாதது குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுவதையும் அந்த முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் வன்மையாக மறுத்தார்.
அந்தப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவிக்குமாறு தமது எட்டு ஆண்டு காலத் தவணையின் போது பல முறை கட்சித் தலைவரைக் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
பாஸ் அம்னோ ஐக்கியத்துக்காக தாம் வேலை செய்வதாகக் கூறப்படுவதற்கும் ஹசான் பதில் அளித்தார்.
“கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லை எறிய வேண்டாம்,” என அவர் முஸ்தாபாவை எச்சரித்தார்.
“அம்னோ-பாஸ் இணைப்பு பற்றி குறிப்பிடவே இல்லை. அம்னோ தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்களில் முஸ்தாபாவும் சம்பந்தப்பட்டிருந்தார். அந்த விவகாரத்தைத் தொட வேண்டாம் என எனது ஆறாம் அறிவு சொல்கிறது. முஸ்தாபாவுக்கும் ஆறாம் அறிவு இருப்பதாக நான் நம்புகிறேன்.”