மாபூஸ்: ஹசன் பாஸ்மீது போர் தொடுப்பதுபோல் தெரிகிறது

சிலாங்கூர் பாஸ் ஆணையர், ஹசன் அலி கட்சியின் சமூகநல அரசு பற்றிய கொள்கை குறித்து கேள்வி எழுப்புவது கட்சியின்மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார்.

சமூகநல அரசுக் கொள்கை கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, அது பற்றி  இப்போது கேள்வி எழுப்பக்கூடாது என்று மாபூஸ் குறிப்பிட்டார்.

“இப்போது அக்கொள்கை குறித்துக் கேள்வி எழுப்புகிறார் என்றால் ஹசன் கட்சிக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்கிறார் போலத் தெரிகிறது. ஆண்டுக்கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றுக்கு எதிராகக் கேள்வி எழுப்புவது முறையல்ல”, என்றாரவர்.

ஹசன் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என்று மாபூஸ் கூறவில்லை, ஆனால் அவரது எதிர்காலத்தை அவரே முடிவு செய்துகொள்ளட்டும் என்றார். 

“அவருக்கு நான் அறிவுரை சொல்லத் தேவையில்லை. அவரே நல்ல தன்முனைப்புப் பேச்சாளர். எனவே அவரே முடிவு செய்யட்டும். அவரிடத்தில் நான் இருந்தால் விலகிக்கொள்வேன்”, என்றார்.

உலாமா-அல்லாதவர்கள் பாஸை அதன் ‘இஸ்லாமிய அரசு’ என்ற மையக் கொள்கையிலிருந்து திசைதிருப்பி ‘ஒற்றுமை அரசு’ , ‘சமூகநல அரசு’ என்றெல்லாம் கொண்டுசெல்வதாகவும் இது பாதை மாறிச் செல்வதாகும் என்று ஹசன் கூறியிருந்தது குறித்துக் கருத்துரைத்தபோது மாபூஸ் இவ்வாறு கூறினார்.

பாஸின் உயர்த்தலைமைத்துவத்தை உலாமா-அல்லாதவர்கள் கவர்ந்துகொண்டு பாதை விலகிச் செல்வதாகக் கூறிய ஹசனை ஒரு கபடதாரி என்று மாபூஸ் சாடினார்.

பாஸின் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் இருவருமே உலாமாக்கள். எனவே, உலாமா-அல்லாதவர்கள் கட்சியை எடுத்துக்கொண்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாரவர்.

TAGS: