செகாமாட் தொகுதியை மீட்டெடுக்க ம.இ.கா.வுக்கு வாய்ப்பு குறைவு

 இராகவன் கருப்பையா – ஜொகூர் மாநிலத்தில் உள்ள செகாமாட் தொகுதி ம.இ.கா.வைப் பொருத்த வரையில் மிகவும் முக்கியமான, பாரம்பரியமான ஒரு தொகுதியாகும்.

கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து சுமார் 36 ஆண்டுகளாக அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அக்கட்சி, 4 ஆண்டுகளுக்கு முன் பக்காத்தானிடம் அதனை இழந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம.இ.கா. அத்தொகுதியை மீட்டெடுப்பதற்கான அறிகுறிகளைக் கொஞ்சம் கூடக் காணவில்லை என்றுதான சொல்ல வேண்டும்.

ஏனெனில் அக்கட்சியின் சார்பில் அங்கு போட்டியிடுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதன் தேசியப் பொருளாளர் ராமசாமி அரசியலில் அனுபவம் இல்லாத, மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர்.

ராமசாமியை அங்கு நிறுத்தியுள்ளதன் வழி அதனை மீட்டெடுப்பதற்கு கட்சி தலைமைத்துவம் ஆர்வம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.

ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவரான,  அண்மையில் காலமான சுப்ரமணியம் சின்னையா கடந்த 1982ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 5 தவணைகளுக்கு அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

பிறகு 2014ஆம் ஆண்டிலிருந்து 3 தவணைகளுக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் சுப்ரமணியம் சதாசிவம் அதனை தக்கவைத்துக் கொண்டார்.

எனினும் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தானின் பேரலையில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

அந்தக் கூட்டணியைப் பிரதிநிதித்து அங்கு போட்டியிட்ட தொழில் முனைவர் சந்தரக்குமாரிடம் அத்தொகுதியை ம.இ.கா. இழந்தது.

இம்முறை பாக்காத்தான் வேட்பாளாராக யுனேஸ்வரன் என்பவரும், பெர்சத்துவின் பூபாலனும் உள்ளார்கள்.

இத்தகையச் சூழலில் ஒரு வலுவான வேட்பாளரை அங்கு நிறுத்தியிருந்தால் அத்தொகுதியை மீட்பதற்கான வாய்ப்பு ம.இ.கா.வுக்கு அதிகமாக இருந்திருக்கும்.

ஒரு செல்வந்தரான 59 வயதுடைய ராமசாமி அரசியலில் துளியளவும் அனுபவம் இல்லாத ஒரு கத்துக் குட்டி.

ம.இ.கா.வின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு விக்னேஸ்வரனிடம் படுதோல்வியடைந்த அவர் பிறகு தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

சாமிவேலு காலத்தில் ஒரு குத்தகையாளராகத் தொழில் தொடங்கி இன்று மிகப் பெரியதொரு வீடமைப்பாளராக விளங்குகிறார்.

எத்தருணத்திலும் களத்தில் இறங்கி உதவி தேவைப்படுவோரை சந்தித்து சேவையாற்றியதாக சரித்திரமே இல்லாத ஒருவர் செகாமட் தொகுதியை ம.இ.காவுக்கு மீட்டுக் கொடுப்பார் என்பது வெறும் பகல் கனவுதான்.

பக்காத்தான் சார்பில் அங்கு களம் காணும் துடிப்பு மிக்க இளைஞரான 36 வயது யுனேஸ்வரன் ராமராஜ் அதிக பெரும்பான்யில் வெற்றி பெருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அத்தொகுதி மக்களுக்கு சுயமாகவே சேவையாற்றி வரும் அவர் அங்குள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவராவார்.