இராகவன் கருப்பையா – உலகில் பல நாடுகள் சீரழிவது அந்நாடுகளின் தலைமைத்துவத்தில் இருக்கும் தனிப்பட்ட நபர்களின் சுயநல வேட்கைதான்.
கடந்த கால சர்வதேச வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தால் இந்த உண்மைதான் மிகத் தெளிவாக புலப்படுகிறது.பல வேளைகளில் இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் மடிவதற்கும் காரணமாக இருக்கும் அத்தகைய அராஜக நபர்களைத் தலைவர்கள் என்று சொல்வதற்கே நா கூசுகிறது என்றால் அது தவறில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடி ஒரு புறமிருக்க, எந்நேரத்திலும் வீட்டினுள் வெள்ளம் புகுந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் ஒவ்வொரு நொடியையும் நகர்த்திக் கொண்டிருக்கும் வெகுசன மக்களின் நலனை புறம் தள்ளி பொதுத் தேர்தலுக்கு வித்திட்ட அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டையும் அப்படிதான் எடை போடத் தோன்றுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நாட்டின் நலன் பற்றியும் பொருளாதார வளர்ச்சி பற்றியும் மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் பேசுவதற்கே தகுதியற்றவர்கள்.
பொதுத் தேர்தலை ஏன் அவர் துரிதப்படுத்த முனைந்தார் என்பது வெள்ளிடை மலை என்ற போதிலும் ஒரு பொது நிகழ்ச்சியில் அப்பட்டமாகவே அதனை அவர் ஒப்புக் கொண்டதுதான் உலக மகா வேடிக்கை.
கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை உலுக்கிய கடுமையான வெள்ளத்தில் 50கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்ததோடு மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புடைய சொத்துக்கள் சேதமடைந்தன.
இவ்வாண்டும் அத்தகைய நிலை ஏற்படக்கூடும் என பல்வேறுத் தரப்பினர் எச்சரித்த போதிலும் மழையோ வெள்ளமோ தேர்தலை நடத்தியேத் தீரவேண்டும் எனப் பிடிவாதமாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வழிவகுத்தார் அவர்.
தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றால்தான் சட்டத்தின் பிடியில் இருந்து பாரிசான் தலைவர்கள் தப்ப முடியும் என ரொம்பவே துணிச்சலாக அவர் அறிவித்தார்.
சம்பந்தப்பட்ட எல்லாத் தலைவர்களும் அந்தச் சமயத்தில் எக்காளமிட்டு சிரித்தக் காணொளிகளை பார்த்த பொது மக்களில் யார்தான் எரிச்சலடையவில்லை?
கடந்த 1930களிலும் 40களிலும் உலகை உலுக்கிய ஜெர்மனியின் ஹிட்லர் தூண்டிய உலகப் போரினால் இலட்சக்கணக்கானோர் மடிந்தது சரித்திரம்.
அதே போல்தான் கம்போடியாவின் கொடுங்கோலன் ‘போல் பொட்.’ கடந்த 1970களில் 4 ஆண்டுகளுக்கு அந்நாட்டை ஆட்சி புரிந்த அவர் ஏறத்தாழ 2 மில்லியன் பேரைக் கொன்றுக் குவித்ததாகச் சொல்லப்படுகிறது.
அண்மைய வரலாற்றைப் புரட்டினால் ஈராக்கின் சடாம் ஹூசேன் மற்றும் லிபியாவின் கடாஃபி ஆகியோரும் நம் கண் எதிரே வருகிறார்கள். இவர்கள் அனைவருமே சுயநலத்தை மட்டுமே முன்வைத்து சர்வாதிகார ஆட்சி செய்தது உலகறியும்.
நடப்பு நிலவரத்தைப் பார்த்தால் ரஷ்ய அதிபர் பூட்டினும் ஏறத்தாழ அப்படிதான். அவருடைய அகங்காரத்தால் ரஷ்யாவிலும் யுக்ரேய்னிலும் ஆயிரக் கணக்கானோர் போரில் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
அதைப் பற்றி அவர் துளியளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தனது சுயநல நோக்கத்தில் மட்டுமே அவர் குறியாய் இருக்கிறார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியல் அரக்கர்கள் என்பதில் மாறுபட்டக் கருத்து இருக்கவே முடியாது.
கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சிலாங்கூர் ஸ்ரீ முடா பகுதியில் இப்போதும் கூட லேசாக மழைத் தூறினாலும் அங்குள்ளவர்கள் உறக்கமிழந்து பயத்தில் தவிக்கின்றனர். வெள்ளப் பிரச்சினை அங்கு இன்னும் தீர்க்கப்படவில்லை.
தேர்தலைப் பற்றியோ, வேட்பாளர்கள் பற்றியோ பிரச்சாரங்கள் பற்றியோ சிந்திக்க அப்பகுதி மக்களுக்கு நேரமில்லை.
இன்னொரு புறம் கோறனி நச்சில் மீண்டும் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரச்சாரங்களின் போதோ தேர்தல் தினத்தன்றோ கூட்ட நெரிசலில் நிற்பதற்கு மக்கள் தயங்கினாலும் வியப்பில்லை.
ஆக சட்டத்தால் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கு தன்னலத்தை மட்டுமே முன்னிறுத்தி, 33 மில்லியன் பேரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களிடம் வலுக்கட்டாயமாகத் தேர்தலைத் திணித்த அம்னோ தலவரின் செயலை அரக்கத்தனம் என்று விமர்சிக்காமல் வேறு எப்படிதான் வர்ணிப்பது?