தாப்பா, பேராக் / ரெம்பாவ், நெகிரி செம்பிலான் | 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ-15) போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) இரண்டு வேட்பாளர்களும் அந்தந்தத் தொகுதிகளில் 5-முனைப் போட்டியை எதிர்கொள்கின்றனர்.
3 மாநிலச் (பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங்) சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது.
ஜிஇ-15 கடுமையான போட்டிகளைக் கண்டுள்ளது. ஓர் இடத்தில் கூட போட்டியின்றி பிரதிநிதிகள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) வெளியிட்டுள்ள தகவலின்படி, 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நம்பிக்கை கூட்டணி (பி.எச்.) சின்னத்தில் 206 பேர், தேசிய முன்னணி (தே.மு.) வேட்பாளர்களாக 178 பேர், தேசியக் கூட்டணி (தே.கூ.) வேட்பாளர்களாக 148 பேர், பெஜுவாங் தானா ஆயேர் கட்சி (பெஜுவாங்) வேட்பாளர்களாக 116 பேர், வாரிசான் கட்சி சார்பில் 52 பேர் மற்றும் காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்.) கட்சி சார்பில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேசியக் கூட்டணியுடன் இணைந்த பாஸ், 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் (கிளந்தானில் 14 & திரெங்கானுவில் 8) தனது சொந்தக் கட்சி சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிடுகிறது.
பி.எச். உடன் இணைந்திருக்கும் ஜனநாயகச் செயற்கட்சி (டிஏபி), அதன் சொந்தச் சின்னத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் (சரவாக் மாநிலம்) மூடா அதன் சொந்தச் சின்னத்தில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஜிஇ15-இல் போட்டியிடும் பிற அரசியல் கட்சிகளான பார்ட்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) 16 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பார்ட்டி கபூங்கான் ரக்யாட் சபா (ஜி.ஆர்.எஸ்.) 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், பார்ட்டி சரவாக் பெர்சத்து (பி.எஸ்.பி.) 10 இடங்களிலும், பார்ட்டி பங்சா மலேசியா (பி.பி.எம்.) 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், சுயேட்சை வேட்பாளர்களாக 108 பேர் போட்டியிடுகின்றனர்.
பெர்லிஸ் மாநிலத்தின் 15 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான போட்டியில் 64 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 59 பேராக் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட 220 வேட்பாளர்களும், 42 பகாங் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற 150 வேட்பாளர்களும் நேற்று தங்களைப் பதிந்துகொண்டனர்.
P115 பத்து நாடாளுமன்றத் தொகுதி, மிகத் தீவிரப் போட்டிகளைக் கொண்ட இடமாக உள்ளது. இங்கு 10 முனைப் போட்டி நடைபெறுகிறது. அதேசமயம், பேராக் N47 செண்டிரியாங் சட்டமன்றத் தொகுதியிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இம்முறை தேர்தலில், P131 ரெம்பாவ் (நெகிரி செம்பிலான்) நாடாளுமன்றத் தொகுதியிலும் N48 ஆயேர் கூனீங் (தாப்பா, பேராக்) சட்டமன்றத் தொகுதியிலும் பி.எஸ்.எம். தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
தினகரன் சுப்ரமணியம், ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதி பி.எஸ்.எம். வேட்பாளர்
செக்கு தீனா
என்று அழைக்கப்படும் எஸ்.தினகரன் பி131 ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். வேட்பாளராகப் போட்டியிடுகிறார். செக்கு தீனா தே.மு., பி.எச்., தே.கூ. மற்றும் பெஜூவாங் ஆகிய வேட்பாளர்களை எதிர்கொள்கிறார்.
ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில், மொத்தம் 133,551 வாக்களிக்கும் தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இப்பொதுத் தேர்தலில், நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒரே பி.எஸ்.எம். வேட்பாளர் செக்கு தீனா, ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதி வாக்குச் சீட்டில் 4-வது இடத்தில் உள்ளார். அம்னோவின் துணைத் தலைவரும் அரசியல் ஜாம்பவானுமான தோக் மாட் -உடன் செக்கு தீனா மோதுகிறார்.
பேராக், N48 ஆயேர் கூனீங் சட்டமன்றத் தொகுதியில் கேஎஸ் பவானி 5 முனை போட்டியை எதிர்கொள்கிறார். பவாணி தே.மு., பி.எச்., தே.கூ. மற்றும் பெஜூவாங் வேட்பாளர்களை எதிர்கொள்கிறார்.
பேராக், ஆயேர் கூனிங் மாநிலத் தொகுதி பிஎஸ்எம் வேட்பாளர் கே.எஸ். பவாணி
ஆயேர் கூனீங் சட்டமன்றத் தொகுதியில், 31,940 பதிவு செய்த வாக்காளர்கள் உள்ளனர். ஆயேர் கூனீங் மாநிலச் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச் சீட்டில் 5-வது இடத்தில் பவாணி உள்ளார்.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஆயேர் கூனீங் மாநிலச் சட்டமன்றத் தொகுதியில், பி.எஸ்.எம். சார்பில் போட்டியிட முன்மொழியப்பட்ட கேஎஸ் பவாணிக்கு ஆதரவளிக்க, கட்சியின் தேசியத் தலைவர் ஜெயக்குமார் தேவராஜ் தாப்பா வேட்பாளர் நியமன மையமான மெர்டெக்கா மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்.
“மற்ற கட்சி வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், பி.எஸ்.எம். வேட்பாளர், பூர்வக்குடி சமூகத்தின் பாரம்பரிய நில உரிமைகள், B20 குழுவினருக்கான வீட்டுப் பிரச்சனைகள், விவசாயிகளுக்கான விவசாய நிலம் போன்ற அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதில் கவனம் செலுத்துவார்,” என்று டாக்டர் ஜெயக்குமார்.
“பி.எஸ்.எம். சாதாரண மக்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. பி.எஸ்.எம்.-இன் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தினுள் நுழையும்போது, சாதாரண மக்களின் பிரச்சனைகள் இருசபைகளிலும் ஒலிக்கும்.”
வேட்புமனு தாக்கல் நடக்கும் தினத்தில், கட்சி ஆதரவாளர்களை மட்டும் திரட்டி ஆரவாரம் செய்யும் மற்ற அரசியல் கட்சிகளைப் போலல்லாமல், பி.எஸ்.எம். வேட்பாளர் பவாணிக்கு ஆதரவாகத் திரண்டவர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பாமர மக்களும் அடங்குவர்.
“இதனால்தான், பி.எஸ்.எம். இம்முறை பொதுத் தேர்தல் பிரச்சாரக் குரலாக “பாமர மக்களுக்கான குரலைத் தேர்ந்தெடுப்போம்!” (Pilih Suara Marhaen) என்ற முழக்கத்தைப் பயன்படுத்துகிறது,” என்றும் அவர் சொன்னார்.
ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவாக பி.எஸ்.எம். கட்சியின் தேசியத் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் கலந்து கொண்டார்.
“நெகிரி செம்பிலான் அம்னோவின் வலுவான கோட்டை என்பதால், ரெம்பாவில் போட்டியிட பி.எஸ்.எம். தேர்வு செய்தது. போராட்டத்தில் ஆற்றல்மிக்க, துணிச்சலான கட்சி என்ற வகையில், இந்த மாபெரும் சவாலை எதிர்கொள்ள பி.எஸ்.எம். தயாராக உள்ளது,” என்றார் எஸ் அருட்செல்வன்.
“பாமர மக்களின் தலைவிதியை மாற்ற போராடும் பி.எஸ்.எம்., அவர்களின் குரலை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.
நன்றி :- sosialis