ஜிஇ15 | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கே எஸ் பவாணி, தனது சொத்தைப் பொதுவில் அறிவித்து, மற்ற வேட்பாளர்களையும் அவ்வாறு செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
36 வயதான பவாணி, பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். RM48,563.40 மதிப்புள்ள அவரது மொத்த சொத்துக்களில் இருந்து RM47,570.90 கடனைக் கழித்து, தற்போது தனது சொத்து மதிப்பு RM992.50 என அறிவித்தார்.
தன்னிடம் RM29,000 மதிப்புள்ள பெரோடுவா பேஷ்ஷா இரகக் கார், RM2,100 மதிப்புள்ள ஓப்போ ரெனோ 5 ப்ரோ இரகக் கைத்தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்கில் RM17,463.40 இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது தாயாருடன் வசித்துவரும் பவாணி, RM27,320.90 கார் கடன், RM20,250 கல்விக்கடன் என மொத்தம் RM47,570.90 செலுத்த வேண்டிய கடன்கள் உள்ளன என்றும் கூறினார்.
வழக்கறிஞராக தனது மாதச் சம்பளம் RM5,000 என்றும், நவம்பர் 1, 2022 வரையான அவரது மொத்த ஈ.பி.ஃப். சேமிப்பு RM12,189.41 என்றும் அவர் தெரிவித்தார்.
பி.எஸ்.எம். துணைப் பொதுச்செயலாளருமான அவர் கூறுகையில், 1999 பொதுத் தேர்தலில் இருந்து கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களைப் பொதுவில் அறிவிக்கும் நடைமுறை உள்ளது என்றார்.
அப்பாரம்பரியத்தின் படி, நேற்று ஆயேர் கூனிங் பி.எஸ்.எம். தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பவாணி தனது சொத்துக்களை அறிவித்தார்.
“முன்னாள் எம்.பி.க்களும் வருங்கால மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் சொத்துக்களை இதுபோல் அறிவிக்க வேண்டும்; இவர்களின் சொத்து மதிப்பைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள இது மிகவும் முக்கியம். எனவே, மற்ற வேட்பாளர்களும் இவ்வாறு செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
“சொத்து அறிவிப்பு வேட்பாளர்களின் வெளிப்படைத்தன்மையைச் சித்தரிக்கிறது. இதன்வழி, தூய்மையான வேட்பாளர்களையும் பிரதிநிதிகளையும் உருவாக்க முடியும்,” என பவாணி மலேசியாகினியிடம் சொன்னார்.
அவருடன், பி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ், முன்னாள் துணைத் தலைவர் எம் சரஸ்வதி மற்றும் மத்தியச் செயலவை உறுப்பினர் சோங் யீ சான் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் இருந்தனர்.
சரிபார்த்து சமநிலைப்படுத்தவும்
டாக்டர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தச் சொத்துப் பிரகடனம் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் சரிபார்க்கும் வகையில் பி.எஸ்.எம். இணையதளத்தில் வெளியிடப்படும்.
“சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, பவாணி பணக்காரராகிவிட்டாரா என்பதை வாக்காளர்கள் சரிபார்க்கலாம்.
“அவருடைய சொத்து மதிப்பு அதிகரித்திருந்தால், அவர் எப்படி பணக்காரரானார், பணம் எங்கிருந்து வந்தது என்று மக்கள் அவரிடம் கேட்கலாம்,” என்று அவர் கூறினார்.
அரசியல்வாதிகள் ஊழலில் இருந்து விலகி இருப்பதை உறுதிசெய்யும் வகையில், சொத்துக்களை அறிவிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“இது பி.எஸ்.எம். கொண்டு வந்த புதிய அரசியல் கலாச்சாரம்.”
இந்தத் தேர்தலில், ஆயேர் கூனிங்கில் ஐந்து முனை போட்டியில் ஈடுபட்டுள்ள பவாணி, தேர்தல் பிரச்சாரத்தின் போது இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சு அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
ஆயேர் கூனிங், 1986-ஆம் ஆண்டு முதல், அம்னோவின் கோட்டையாகவும், 2004-ஆம் ஆண்டு முதல் சம்சுடின் அபு ஹசானின் கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.