அரசியல் அறிமுகம்: யுனேஸ்வரன் ராமராஜ்

இராகவன் கருப்பையா – ஜொகூர் மாநிலத்தின் செகாமாட் தொகுதி மக்கள் பல்லாண்டு காலமாக எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதே தமது தலையாய நோக்கம் என்று கூறுகிறார் பக்காத்தான் ஹராப்பானைப் பிரதிநிதித்து அத்தொகுதியில் களமிறங்கியுள்ள யுனேஸ்வரன் ராமராஜ்.

பி.கே.ஆர். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான 35 வயதுடைய இந்த இளஞ்சிங்கம் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக அதொகுதி மக்களுக்கு தன்னார்வ முறையில் சேவையாற்றி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் கடுமையான மழை பெய்யும் போது அந்தத் தொகுதியின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

இது ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருகிற போதிலும் முறையானதொரு தீர்வு காண்பதற்கு ஆக்ககரமான நடவடிக்கை எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளாததால் மக்கள் படும் அவதியைக் காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்கிறார் ஒரு தோட்டப் பாட்டாளியின் மகனான யுனேஸ்வரன்.

ராமராஜ் – உண்ணாமலை தம்பதியினரின் 4ஆவது பிள்ளையான அவர் ஒரு தொழில்துறை பட்டதாரியாவார். மிகவும் சுறுசறுப்பு மிக்க இந்த இளைஞர் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் தற்போது முதுகலைப் பட்டப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.

தமது ஆரம்பக் கல்வியை ஒரு சீனப் பள்ளியில் பயின்ற யுனேஸ்வரன், உலு திராமில் உள்ள எஸ்.எம்.கே. டேசா செமர்லாங்கில் தமது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீன மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ள் அவர் செகாமாட் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவராவார்.

ஏனெனில் பக்காத்தான் ஆட்சியின் போது ஜொகூர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக யுனேஸ்வரன் பணியாற்றியுள்ளார்.

அது மட்டுமின்றி 14ஆவது பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் சார்பில் அங்கு போட்டியிட்ட சந்தரக்குமாருக்கு தேர்தல் இயக்குனராகவும் கூட அவர் பணிபுரிந்திருக்கிறார்.

பி.கே.ஆர். கட்சியின் தெப்ராவ் பிரிவின் நடப்புத் தலைவரான யுனேஸ்வரன் அக்கட்சியின் ஜொகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவராகவும் உள்ளார்.

செகாமாட் மாவட்டம் முழுவதும் தற்போது சூறாவளிப் பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் யுனேஸ்வரனின் சீன மொழி ஆற்றலைக் கண்டு அங்குள்ள சீன சமூகத்தினர் வியப்படைந்துள்ளனர்.

இதனால் அத்தொகுதிவாழ் சீன சமூகத்தின் வாக்குகள் ஒட்டு மொத்தமாக யுனேஸ்வரனுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தை இறைத்து வாக்குகளை சேகரிக்க முற்படும் வேட்பாளர்கள் மத்தியில் தமது சேவைத் திறனை மட்டுமே முதலீடாகக் கொண்டு களமிறங்கியுள்ள இந்த இளைஞர் இன்னமும் ஒரு பிரம்மச்சாரிதான்.

உதவி தேவைப்படுவோருக்கு எந்நேரத்திலும் களமிறங்கும் ஒரு இளமையான, துடிப்பு மிக்க பிரதிநிதியையே மக்கள் விரும்புகின்றனர் என்று கூறும் யுனேஸ்வரன், தொகுதி மக்களோடு ஒன்றித்து செயலாற்றுவதில் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செகாமாட்டின் முன்னாள் பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பி.பி.எம். கட்சி உறுப்பினருமான சந்தரக்குமார் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து பெஜுவாங் கட்சியின் சைட் ஹைருல், ம.இ.கா.வின் ராமசாமி மற்றும் பெரிக்காத்தானை பிரதிநிதிக்கும் பூபாலன், ஆகியோர் யுனேஸ்வரனை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இருந்த போதிலும் இவர்களில் யாருமே வெற்றியடைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலில் இருந்து இந்நாடு விடுபடும் என்பதில் உறுதியாக இருக்கும் யுனேஸ்வரன் செகாமாட் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இப்போது வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.