பேராக் மாநில மருத்துவமனைகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் அவல நிலையைப் பாதுகாப்பதில் உறுதியும் அர்ப்பணிப்பும் கொண்ட கே எஸ் பவானியை ஆதரிக்குமாறு, N48 ஆயேர் கூனிங் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பேராக், N48 ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளரான கே எஸ் பவானி, தீபகற்ப அரசு மருத்துவமனைகளில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைமையுடன் இணைந்து, இன்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்றையச் செய்தியாளர் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவர் ரோசியா ஹாஷிம், பொருளாளர் ரோஸ்னி மோந்தா, செயற்குழு உறுப்பினர் ஃபௌசியா இப்ராஹிம் மற்றும் நிர்வாகச் செயலாளர் எம் சரஸ்வதி ஆகியோர் கே எஸ் பவானியுடன் இருந்தனர். அக்குழுவினர் பவானிக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
“தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான பல போராட்டங்களில், குறைந்தபட்ச ஊதியக் கோரிக்கை போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பவானி ஈடுபட்டுள்ளார்,” என்று அச்சங்கத்தின் தலைவர் ரோசியா ஹாஷிம் கூறினார்.
“இன்று நாம் அனுபவிக்கும் குறைந்தபட்ச ஊதியம் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவு. இருப்பினும், தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் RM1,500 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, மீண்டும் போராட வேண்டும் போல் தெரிகிறது,” என்றார்.
பவானி குறித்து கூறுகையில், “பல நீதிமன்ற வழக்குகளில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து வாதாடிய, எங்கள் தொழிற்சங்கத்திற்கு அதிகம் உதவி வரும் மக்களுக்கான வழக்கறிஞர் ஆவார் பவானி,” என்றார் ரோசியா.
“தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தனது நேரத்தை அர்ப்பணிக்க அவர் எப்போதும் தயாராக இருப்பார். எங்களுக்கு அவருடைய உதவி தேவைப்படும் போதெல்லால் எங்கிருந்தாலும் எங்களுக்காக இறங்கி வருவார். சகோதரி பவானி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது எங்களுக்கெல்லாம் பெருமை. அவர் பாமர மக்களின் தோழர். எனவே, ஆயேர் கூனிங் தொகுதி வாக்காளர்கள் பவானியை ஆதரிக்க வேண்டுமென எங்கள் சங்கத்தின் சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
“தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உயிர்நாடியாகும்; ஆனால் தற்போது மலேசியாவில் 6% தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்க உறுப்பினர்களாக உள்ளனர்,” என்று எம் சரஸ்வதி கூறினார்.
“தொழிலாளர் சங்கத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் பவானி நிறைய உதவிகள் செய்துள்ளார். இப்போது பாமர மக்கள் கண்ணியத்துடன் வாழ அனுமதிக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றத்திலும் இந்தத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குரல் நமக்குத் தேவை.”
“இப்போது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், 99% அடிமட்ட மக்களை உண்மையில் பாதுகாக்கும் சட்டம் எதுவும் இதுவரை இல்லை,” என்று சரஸ்வதி மேலும் கூறினார்.
எனவே, பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் நேர்மறையான குரலைக் கொண்டு வர, எப்போதும் மக்களுக்காகப் பாடுபடும், மக்களுடனேயே இருக்கும் பவானிக்கு வாக்களிக்குமாறு ஆயேர் கூனிங் வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பவானி, பிஎஸ்எம் இந்தத் தேர்தல் களத்தைப் பயன்படுத்தி, பாமர மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறது என்றார்.
“இன்று நாங்கள் எழுப்ப விரும்பும் பிரச்சனை, தொழிலாளர்களைப் பல விதங்களில் பாதிக்கும், அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்தப்படும் குத்தகை அடிப்படையிலான துப்புரவு பணி முறை.”
“இந்த ஒப்பந்த முறை மிகவும் சிக்கலானது. தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவமனைகளில் தேவைப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற அத்தியாவசிய, நிரந்தரத் தொழிலாளர்களுக்குக் குத்தகை முறையைப் பயன்படுத்தக்கூடாது.”
“முன்பு, அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றியத் துப்புரவுத் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள். தனியார் மயமாக்கலின் தந்தை டாக்டர் மகாதீர், 1990-களில், அரசு மருத்துவமனைகளில் தனியார்மயச் சேவைகளை அறிமுகப்படுத்தியதால், இந்தத் தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பு இல்லாத, ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர்,” என்று பவானி தெரிவித்தார்.
“குத்தகை முறைமை தொழிலாளர்களை வேட்டையாடுகிறது. குத்தகை முறையை இரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும் தொழிலாளர்களை அரசே நேரடியாக வேலைக்கு அமர்த்தி, ஊதியம் கொடுக்க வேண்டும். மாநில அளவில், மாநில அரசு தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து வளாகங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறைமையை இரத்து செய்ய வேண்டும்,” என்று வழக்கறிஞருமான கே எஸ் பவானி கூறினார்.