இராகவன் கருப்பையா – ஜ.செ.க.வில் உள்ள இந்தியப் பெண்களில் பழுத்த அரசியல் அனுபவத்துடன் முன்னிலை வகிப்போரில் ஷாஷா எனப்படும் பவானி வீரையாவும் ஒருவராவார்.
பேராக்கின் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவரை எல்லா நிலைகளிலும் உள்ள கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேல் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள பவானி, மனிதவள நிர்வாகத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையில் பேராக், துரோனோ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வி.சிவகுமாரின் அரசியல் உதவியாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அந்த சமயத்தில் தமக்கு நிறைய அனுபவம் கிடைத்ததாகக் கூறும் பவானி ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் பேராக் மாநில ஜ.செ.க.வின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பத்து காஜா தொகுதியில் பல நிலைகளில் பல்லாண்டு காலமாக சேவையாற்றியுள்ள இவர் கடந்த 10 ஆண்டுகளாக பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் நிர்வாகச் செயலாளராக இருந்து வருகிறார்.கடந்த 2013ஆம் ஆண்டிலும் 2018ஆம் ஆண்டிலும் நடைபெற்ற 13ஆவது, 14ஆவது பொதுத் தேர்தல்களின் போது சரவாக், தெலுக் இந்தான், கோல கங்சார மற்றும் கேமரன் மலை, ஆகிய பகுதிகளில் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்ட பவானியின் செயல்திறனைக் கண்ணுற்ற கட்சியின் தலைமைத்துவம் எதிர்வரும் தேர்தலில் இவரை களமிறக்க முடிவு செய்தது.
மாலிம் நாவார் தொகுதியில் போட்டியிடுவதற்கு இவர்தான் சரியான வேட்பாளர் என கட்சியின் உயர்மட்டத் தேர்வுக் குழு தீர்மானித்தது.ஒரு சிறந்த மேடை பேச்சாளரான 49 வயது பவானியை எதிர்த்து பெரிக்காத்தானின் ஷெரி சைட், பாரிசானின் சின் வூன் கியோங் மற்றும் வாரிசானின் லியோங் சியோக் கெங், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சீனர்கள் அதிகமாக வசிக்கும் மாலிம் நாவார் தொகுதி ஜ.செ.க.வின் பாரம்பரியக் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வாக்காளர்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சீன சமூகத்தினர் ஆவர்.
கடந்த 2 தவணைகளிலும் அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்ட ஜ.செ.க.வின் லியோங் சியோக் கெங் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட கட்சித் தலைமைத்துவம் கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கியது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் பி.பி.எம். கட்சியில் சேர்ந்த அவர் இம்மாதத் தொடக்கத்தில் வாரிசானுக்குத் தாவினார். இதனால் அவருடையப் புகழ் தற்போது மங்கிவிட்ட நிலையில் தனது வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்கிறார்.