15வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) வெற்றி பெற்றால், எந்தக் கட்சியின் பிரதிநிதி துணைப் பிரதமராக (DPM) நியமிக்கப்படுவார் என்ற கேள்வி விவாதிக்கப்படவில்லை என்று தற்காலிகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
“இந்த விஷயம் (DPM -க்கான முன்மொழியப்பட்ட பெயர்கள்) விவாதிக்கப்படவில்லை… வேட்பாளர்கள் அம்னோ, சபா அல்லது சரவாக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாங்கள் வெற்றி பெற்றவுடன் இவை அனைத்தும் முடிவு செய்யப்படும்,” என்று சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களின் ஒரு பகுதியினருடன் நேற்று நடந்த சந்திப்பு மற்றும் வாழ்த்து கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் சப்ரி, சுகாதார அமைச்சராக இருக்கும் கைரிக்கு வாக்களிக்குமாறு சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நவம்பர் 19ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பனிலிருந்து ரமணன் ராமகிருஷ்ணனை எதிர்த்துக் கைரி ஏழு முனை மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில், GE15 க்குப் பிறகு BN அரசாங்கத்தை வழிநடத்தினால் அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்வேன் என்று கைரி கூறினார்.
“எனக்குப் பிரதமருடன் நல்ல உறவு உள்ளது, எனவே அமைச்சரவையில் நான் எப்போதும் அவருக்கு ஆதரவளிப்பேன்,” என்று அவர் கூறினார்.