வே. இளஞ்செழியன் – 15-ஆவது பொதுத்தேர்தலில், இதற்கு முன்பில்லாத அளவுக்குப் பல கருத்து கணிப்புகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நம்பிக்கை கூட்டணியே அதிகமான வாக்குகள் – அதாவது ஏறத்தாழ 85 முதல் 105 இடங்களைக் கைப்பற்றும் அளவுக்கு – பெறும் என்று கணித்திருந்தன. அக்கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் சற்று குறைவாக, அதாவது 82 இடங்களை மட்டுமே, நம்பிக்கை கூட்டணி பெற்றுள்ளதென நாம் இப்போது அறிகிறோம்.
நாடாளுமன்றத்தைத் தேவையில்லாமல் முன்கூட்டியே கலைத்து, தேர்தலுக்கு வழிவகுத்த தேசிய முன்னணி, இன்று மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அக்கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி எனப் பரவலாகப் பார்க்கப்பட்டதும், அதன் முதன்மைக் கட்சியான அம்னோவில் நடந்த உட்பூசலும் இந்தப் பின்னடைவுக்குக் காரணிகளாக நாம் பார்க்கலாம்.
தேசிய முன்னணியின் இந்தப் பின்னடைவை நம்பிக்கை கூட்டணி அறுவடை செய்துவிடுமெனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால், அதனால் அதிகப் பலன் பெறப் போவது பெரிக்காதான் நேசியோனாலாகத்தானாக இருக்கக்கூடுமெனத் தன் கள ஆய்வின்வழிக் கண்டறிந்த பிரிஜெட் வெல்ஷ் என்ற ஆய்வாளர் நவம்பர் 8-ஆம் தேதி அன்றே பதிவு செய்திருந்தார்.
இதற்குக் காரணம், மலாய் சமூக வாக்களர்கள் இன-மத அடிப்படையில் வாக்களித்ததுதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இது தவறான, குறுகலான பார்வை என்பது என் கருத்து.
நம் நாட்டுக்கு இனவாத அரசியல் புதிதல்ல. அதை மிகச் சாமர்த்தியமாகக் கையாண்டவர் முன்னாள் பிரதமர், துன் மகாதீர். இனவாத அடிப்படையில் தொடர்ந்து ஆள்வதற்காக, சிறுபான்மையினர், குறிப்பாகச் சீனர்கள், அதிகமாக வாழும் தொகுதிகளைப் பெரிதாகவும் மலாய் வாக்காளர்கள் அதிகமாக வாழும் புறநகர்த் தொகுதிகளைச் சிறிதாகவும் அமைத்து வைத்திருந்தார். அதனால்தான், 80, 90 களில் சீன, இந்திய சமூக வாக்காளர்கள் இப்போதைக் காட்டிலும் சற்று கணிசமான தொகையில் இருந்தாலும், அவர்களின் அரசியல் பலமும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களும் குறைவாகவே இருந்தன.
அதன் விளைவைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். இன்று சிறுபான்மை வாக்காளர்களின் விழுக்காடு 30-ஆகச் சரிந்திருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையோர், மேலே குறிப்பிட்டதுபோல், நகர்ப்புறப் பெருந்தொகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் மட்டும் அத்தொகுதிகளில் இல்லை. அத்தொகுதிகளில், கணிசமான மலாய் வாக்காளர்களும் உள்ளனர்.
இப்படிப்பட்ட நகர்ப்புற தொகுதிகளில் – அவற்றில் மலாய் சமூக வாக்காளர்களே பெரும்பான்மையாக இருந்தால்கூட – நம்பிக்கை கூட்டணியே வென்றிருப்பதை நாம் பார்க்கலாம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சுங்கை புலோ தொகுதி. அத்தொகுதியில் 66 விழுக்காடு மலாய் வாக்காளர்களாக இருந்தும்கூட, அச்சமூகத்தின் நம்பிக்கை நச்சத்திரமாக விளங்கிய கைரி ஜமாலுதீன் நம்பிக்கையின் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த ரமணனிடம் தோற்றிருக்கிறார்.
கோம்பாக் தொகுதியும் ஓர் எடுத்துக்காட்டுதான். இத்தொகுதியில் 80 விழுக்காட்டினர் மலாய் சமூகத்தினராக இருந்த போதிலும், அமைச்சரும் அத்தொகுதியின் முன்னாள் உறுப்பினரான பெரிக்காதனின் அஸ்மின் அலி நம்பிக்கையின் அமிருடினிடம் தோற்றிருக்கிறார்.
நகர்ப்புறங்களில் நிலை இவ்வாறு இருக்க, சிறிய புறநகர்த் தொகுதிகளில் நிலை வேறாக இருக்கிறது. அத்தொகுதிகளில், முந்தைய காலங்களிலேயே மதவாதம் காலூன்றி இருந்ததை நாம் அறிவோம். 2018-ஆம் ஆண்டு மாற்றம் வேண்டி அலையெனத் திரண்டு அரசை மாற்றிய தருணத்தில்கூடப் பாஸ் கட்சி தனித்து நின்று, 18 இடங்களில் வென்றதென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த அடிப்படை பலத்துடன் மலாய் இனவாதக் கட்சியான பெர்சத்து இணைந்ததும், பாஸ் அசுர பலம் பொருந்திய ஒரு தனிக் கட்சியாக இன்று நம் நாட்டில் உருவெடுத்திருக்கிறது.
இந்த முடிவை மலாய் சமூகத்தினரே எதிர்பார்த்தனரா என நமக்குத் தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது ஊழலற்ற அம்னோவை, அல்லது அம்னோ-. அவ்வாறுதான் அச்சமூகத்தினர் பெர்சத்துவைப் பார்க்கின்றனரெனக் கருதுகிறேன். பெரிக்கானுக்கு வாக்களிப்பதன் மூலம் முகீதின் பிரதமராக வருவாரென எதிர்பார்த்திருப்பர். ஆனால், கிடைத்ததோ பாஸ்+. பெரிக்காதானை ஆட்டி வைக்கும் அளவிலான ஆற்றலை ஹடி இன்று பெற்றிருக்கிறார். இவர்களுக்கிடையில் எவ்வளவு காலம் இணக்கமான உறவு நீடிக்குமென்பது கேள்விக்குறிதான்.
இச்சூழலில், இந்தியச் சமூகம் தன் எதிர்கால அரசியல் எவ்வாறு அமைய வேண்டுமெனக் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். நாம் இன்று மிகச் சிறுபான்மை இனமாகக் குறுகி இருக்கிறோம். வரும் தேர்தல்களில் நம் விழுக்காடு இன்னும் குறையும். இதுதான் எதார்த்தம்.
இங்கு நாம் இன்னொரு மேம்பாட்டையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படுமெனத் தேர்தல் வாரியம் அறிவித்துள்ளது. அடுத்த அரசாங்கத்தை நம்பிக்கை அமைக்குமெனின், மேலே குறிப்பிட்ட குறைகளைத் திருத்துவதற்கான வாய்ப்பாக அது அமையும். அதுவே, மத-இனவாதக் கட்சிகளின் பிடியில் சிக்குமெனின், நம் அரசியல் பலம் இன்னும் வேகமாகக் குறையக்கூடும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நம் சமூகத்திடையே நிலவும் சிறு, சிறு சச்சரவுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, நம் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் என்னென்ன, அவற்றை எவ்வாறு ஆய்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அடையப் போகிறோம், அதற்காக எவ்வாறெல்லாம் நம்மிடையிலும் இதர சமூகத்தினரிடமும் ஒத்துழைக்கப் போகிறோம் என்பதை எல்லாம் சிந்தித்து நாம் நகர்வோமானால், நாம் நலம் பெறுவோம்.
நாம் ஒவ்வொரிடமும் குறைகள் இருக்கும். இக்குறைகள் அன்று நாம். நம் நிறைகளே நாம். அதை உயர்த்திப் பார்த்தால், குறைகள் பெரிதாகத் தெரியாது. அதை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நம் அன்றாட வாழ்விலும் பொது வாழ்விலும் கடைபிடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம்மிடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மலரும் நான் நம்புகிறேன். யார் மேலே, யார் கீழே, யாருக்குக் கிடைத்தது, யாருக்குக் கிடைக்கவில்லை என்றெல்லாம் கணக்கிட்டு, குட்டையில் மீன் பிடிப்பதற்குப் பதில், பரந்து கிடக்கும் கடலில் மீன் பிடிக்கக் கலம் கட்டுவதுதான் இன்றைய தலைமுறையின் முன் நிற்கும் சவால்.