அதிர்ச்சி தோல்வியில் அம்னோ, எதிர்பாரா சாதனையில் பெரிக்காத்தான்

இராகவன் கருப்பையா – நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் 82 தொகுதிகளை வென்று பக்காத்தான் கூட்டணி முதல் இடத்தில் உள்ள போதிலும் அம்னோ அடைந்த படுதோல்வியும் பெரிக்காத்தானுக்குக் கிடைத்த திடீர் பலமும்தான் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏறத்தாழ 80லிருந்து 100 தொகுதிகள் வரையில் மட்டுமே பக்காத்தானால் கைப்பற்ற முடியும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 30 தொகுதிகளை மட்டுமே வென்று அம்னோ அடைந்தை வரலாறு காணாதத் தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்று என்பதுவே உண்மை.

கடந்த ஆண்டு பிற்பகுதியிலும் இவ்வாண்டுத் தொடக்கத்திலும் நடைபெற்ற மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த மகத்தான வெற்றிகளைத் தொடர்ந்து பாரிசான் சற்று அகங்காரத்துடன் நடந்து கொண்ட விதத்தை மக்கள் கவனிக்காமல் இல்லை.

‘எந்நேரத்திலும் பொதுத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்’ என அதன் தலைவர்கள், குறிப்பாக முன்னாள் பிரதமர் நஜிப், கட்சித் தலைவர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் துணைத் தலைவர் முஹமட் ஹசான், ஆகிய மூவரும் மிகுந்தத் தலை கனத்துடன் கொக்கரிக்கத் தொடங்கிவிட்டனர்.

நஜிப் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளையில், அவரை விடுவிப்பதற்கும் சட்டத்தின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் புறம் தள்ளி தேர்தலுக்கு வித்திட்டார் அஹ்மட் ஸாஹிட்.

இந்த அநியாயங்களை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மக்கள், அம்னோவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த பாரிசான் கூட்டணிக்கே சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

கடந்த 14ஆம் பொதுத் தேர்தலைப் போலவே இம்முறையும் அதன் முதன்மை பங்காளிகளான ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் படுதோல்வியடைந்தன.

அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர், அதன் துணைத் தலைவர், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் மற்றும் மூத்த அரசியல்வாதி ரஸாலி ஹம்சா போன்றோர் அடைந்தத் தோல்விகள் அக்கட்சியின் வரலாற்றில் எப்பவுமே இல்லாத ஒன்று.

இளைஞர் தலைவரும் துணைத் தலைவரும் புதுமுகங்கள். ஆனால் கோறனி நச்சிலின் சீற்றத்தில் நாடு அவதிப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நிலைமையை ஓரளவு சீர்படுத்தி வழக்கத்திற்குக் கொண்டு வந்த பெருமை கைரியையேச் சாரும்.

கடந்த 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்று வந்த 85 வயது ரஸாலி நாட்டின் நீண்ட கால மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தோல்விகளுக்கு எல்லாம் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அஹ்மட் ஸாஹிட் விலக வேண்டும் எனும் நெருக்குதல்கள் வலுத்து வருவது நியாயமான ஒன்றுதான்.

இதற்கிடையே 73 தொகுதிகளுடன் பெரிக்காத்தான் புரிந்த மகத்தான சாதனையை அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடினுக்கும் தனது மகன் முக்ரிஸுக்கும் அரசியலில் மறுவாழ்வளிக்கும் திட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்தார் முன்னாள் பிரதமர் மகாதீர்.

மலாய்க்காரர்களின் நலனை மட்டுமே முன்னிருத்தி அமைக்கப்பட்ட இக்கட்சியுடன், ‘இனத்தோடுதான் இனம் சேரும்’ எனும் அடிப்படையில் பாஸ் கட்சி சேர்ந்து, பெரிக்காத்தான் தோற்றம் கண்டது.

இஸ்லாமியர்கள் மட்டும்தான் இந்நாட்டை ஆள வேண்டும் எனும் தீவிர மதவாத சித்தாந்தத்தைக் கொண்டு அப்பட்டமாகவே அறிவிப்புகளை செய்து வரும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கின் தொடர் பிரச்சாரம் அவர்களுக்கு பலனளித்துள்ளது.

இந்நாட்டில் ஊழல் மலிந்ததற்கு மலாய்க்காரர் அல்லாதார்தான் காரணம் என்று இனவாத போதையில் அண்மையில் அவர் உளரியதையும் கூட அவர்கள் ஆமோதித்து ஏற்றுக் கொண்டனர்.

இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத, மதவாதப் பிரச்சாரங்களில், நகர்ப் புறங்களுக்கு வெளியே வசிக்கும் மக்கள் சுலபத்தில் மயங்கி விடுகின்றனர்.

‘இஸ்லாம் டி அஞ்ச்சாம்’ (இஸ்லாத்திற்கு ஆபத்து) போன்றத் தலைப்புகளில் அக்கிட்சியினர் ஆற்றும் உரைகளுக்கு கிராமப்புற மக்களிடம் இருந்து பலத்த ஆதரவுக் கிடைக்கிறது.

பக்காத்தானையும் இஸ்ரேலையும் இணைத்து அறிவிலித்தனமானக் கருத்துக்களை பெரிக்காத்தான் தலைவர் முஹிடின் அண்மையில் உமிழ்ந்ததும் நம் ஞாபகத்தில் உள்ளது.

தேசிய ஐக்கியத்தை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் இனத்தையும் மதத்தையும் மட்டுமே மூலதனமாக வைத்து கிராமப் புறங்களில் உள்ளவர்களின் வாக்குகளைப் பெருவாரியாக பெரிக்காத்தான் குவித்துள்ளது நன்றாகவே புலப்படுகிறது.