நாட்டின் 10வது பிரதமராக PKR தலைவர் அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.
மாலை 5 மணிக்கு இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த விழாவைத் தேசிய தொலைக்காட்சிகள் மற்றும் பிரதமர் துறையின் முகநூல் பக்கம் நேரடியாக ஒளிபரப்பியது.
பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார், அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைத் தொடர்ந்து நாட்டின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார்.
75 வயதில் தம்புன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 15 வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஒரு வாரகால அரசியல் முட்டுக்கட்டைக்குப் பின்னர் பதவியேற்றார்.
ஹராப்பான், நாடாளுமன்றத்தில் 82 இருக்கைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு சாதாரண பெரும்பான்மைக்கு தேவையான 112 இருக்கைகளைக் காட்டிலும் குறைவாகும்.
அன்வாரின் முக்கிய போட்டியாளரான பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவர் முகைடின் யாசின், செவ்வாயன்று தனது பக்கம் 115 எம்பிக்கள் இருப்பதாகக் கூறியிருந்தார், ஆனால் அரண்மனை இதை ஏற்கவில்லை.
இக்கட்டான நிலையைச் சமாளிக்க, மாமன்னரால் ஒரு ஒற்றுமை அரசாங்கம் முன்மொழியப்பட்டது.
இந்த ஏற்பாட்டின் கீழ், அன்வார் தேசிய முன்ன்ணி உடனான ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை ஹராப்பானின் முக்கிய பங்காளராக வழிநடத்துவார், அதே நேரத்தில் சரவாக்கின் GPS மற்றும் சபாவின் GRS மற்றும் வாரிசன் ஆகியவை இந்த அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்வார் இதற்கு முன்னர் துணைப் பிரதமர், விவசாய அமைச்சர், கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இன்றைய பதவியேற்பு விழாவில் பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லி, BN தலைவர் அகமது ஜாஹிட் ஹமிடி, DAP பொதுச் செயலாளர் அந்தோனி லோகே, அமானா தலைவர் முகமது சாபு மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி போன்ற உயர்நிலை அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.