அன்வாருக்கான  மாற்றமும்  முகிடின்னின் ஏமாற்றமும்

மலேசியாவின் அரசியல் மகுடத்தை கைப்பற்ற நிகழ்ந்த திகில் நிறைந்த நாடகத்தின் இறுதியில்  நாட்டின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார். பிஎன், ஜிபிஎஸ், வாரிசன் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய  அரசாங்கத்திற்கு அவர் தலைமை தாங்குவார்.

நேற்றிரவு, அம்னோ உச்ச கவுன்சிலின், ஒரு மாரத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து, பெரிக்காத்தான்  நேஷனல் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இல்லை என்று அம்னோ முடிவு செய்தது. அம்னோ தலைவராகவும்,  பிஎன் தலைவராகவும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நீடிப்பதற்கு கவுன்சில் ஆதரவு தெரிவித்தது.

ஹராப்பானை ஆதரிப்பதற்கும் முகிடின் யாசின் தலைமையிலான PN-க்கும் இடையே அம்னோவும் பிஎன்-னும் பிளவுபட்டிருந்தன. பிஎன் அதன் மோசமான தேர்தல் பின்னடைவைச் சந்தித்தாலும், நவம்பர் 19 தேர்தலுக்குப் பிறகு 30 இடங்களைக் கைப்பற்றி அரசியல் ஆட்டத்தின் துருப்புச் சீட்டாக உருவெடுத்தது.

இதற்கிடையில், ஹராபானுடன் ஒத்துழைக்கக் கோரிய யாங் டி-பெர்டுவான் அகோங்கின் பரிந்துரையை நிராகரித்த ஏமாற்றமடைந்த முகைதின், அன்வாரின் ஆதரவைக் கேள்விக் குறியாக்கினார்.

அன்வாருக்கு முன் தம்மைப் பிரதம மந்திரியாக ஆதரிப்பதற்காக 115 சட்டப்பூர்வ அறிவிப்புகள் (Statutory Declaration-SD) இருப்பதாகவும், செவ்வாயன்று மன்னரை சந்திக்க இருப்பதாகவும் கூறிய இந்த  PN தலைவர், ஹரப்பான் தலைவர் அன்வார் தன் வசம் உள்ள எஸ்டிகளின் (SD) எண்ணிக்கையை வெளிப்படுத்துமாறு சவால் விடுத்தார்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் கொண்ட முகைதினின் பெரிக்காத்தான் நேசனல் கட்சிக்கு ஆதரவாக 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது புறக்கணிக்கப்பட்டது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும், அதோடு அவ்வகையில்தான் ஊழலில் சிக்கியுள்ள தேசிய முன்னணியின் ஆதரவும் உள்ளது.

அன்வார் இந்த இக்கட்டான சூழலில் பிரதமராக வந்துள்ளார். அவரின் ஏற்புரையில், ஊழலற்ற நாட்டில் அனைவரும் வாழும் வகையில் தனது ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைக்க வருமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.