10-வது பி.எம்.-இன் முதல் பணி : சி.பி.தி.பி.பி.ஏ. அங்கீகார உடன்படிக்கையைத் திரும்பப் பெறுதல்

மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தப் போகும் அடுத்த கூட்டணியினர், சி.பி.தி.பி.பி. வர்த்தக உடன்படிக்கையின் மலேசிய ஒப்புதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வலியுறுத்துவதாக அதன் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் நேற்று முன் தினம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

புதிதாக பதவியேற்கவிருக்கும் பிரதமரின் முதல் பணியாக அது இருக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன்

ஆக, நேற்று மாலை, நாட்டின் 10-வது பிரதமராகப் பதவியேற்ற அன்வார் இப்ராஹிம் அவர்களின் முதல் பணியாக அது உள்ளது.

“சி.பி.தி.பி.பி.ஏ. என்பது அமெரிக்க தலைமையிலான டிரான்ஸ் பசிபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் புதிய அவதாரமாகும். 2016-ம் ஆண்டு தொடக்கத்தில், நஜிப் துன் ரசாக் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பே, ஆயிரக்கணக்கான மக்கள் தி.பி.பி.ஏ. உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.”

“டோனல்ட் ட்ரம்பின் கீழான அமெரிக்க அரசு, இந்த தி.பி.பி.ஏ. உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விலக மறுத்ததால், மலேசியா உட்பட 11 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை சி.பி.தி.பி.பி.ஏ. என மறுபெயரிட்டு, 2018-ல் அதில் கையெழுத்திட்டன,” என்று அவர் விளக்கமளித்தார்.

அமெரிக்காவின் பங்கேற்பு இல்லாவிட்டாலும், மலேசிய அரசின் கைகளைக் கட்டி, நமது இறையாண்மையைப் பறிக்கும் பல்வேறு நிபந்தனைகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

“துரதிர்ஷ்டவசமாக, அக்டோபர், 2022-ல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை (மிட்டி) அமைச்சர், சற்றும் பொறுப்பற்ற முறையில், சி.பி.தி.பி.பி.ஏ. ஒப்பந்தத்தில் மலேசியாவின் முழுப் பங்களிப்பை உறுதிப்படுத்தும் கடிதத்தை அனுப்பிவிட்டார்,” என சிவராஜன் தெரிவித்துள்ளார்.

“இதன் விளைவாக, இந்த ஒப்பந்தத்தின் தாக்கங்களைப் புதிய அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த ஒப்பந்தம் நவம்பர் 30, 2022 முதல் நடைமுறைக்கு வரும் போது, மக்கள் சார்பான பல்வேறு கொள்கைகளையும் அறிக்கைகளையும் புதிய அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போகலாம்,” என அவர் சொன்னார்.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், மலேசியர்கள் சந்திக்கவிருக்கும் கட்டுப்பாடுகளில் சில;

  1. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்கவரியைக் குறைப்பதால், வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்கள் உள்ளூர் பொருட்களை விட மலிவான விலையில் விற்கப்படும். 90% உள்ளூர் தொழில்கள் (சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் [எஸ்.எம்.இ.]) இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியாமல், வணிகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும்; தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டிவரும். இதனால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
  2. விவசாயத் துறையில் அதிக மானியங்களைப் பெறும் நாடுகளின் உணவுப் பொருட்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டால், அவற்றின் உணவுப் பொருட்கள் உள்ளூர் பொருட்களை விட குறைந்த விலையில் விற்கப்படும். இதனால், உள்ளூர் விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுவார்கள்; தினசரி உணவுப் பொருட்களுக்காக மக்கள் இறக்குமதி பொருட்களை நம்பியிருக்க வேண்டிவரும்.
  3. சி.பி.தி.பி.பி.ஏ. உடன்படிக்கை தேவைகளுக்கு இணங்க, பல்வேறு தேசியச் சட்டங்களைத் திருத்த வேண்டியக் கட்டாயம் ஏற்படும். அவற்றில் ஒன்று, யுபிஒவி91 (UPOV91) உடன்படிக்கைக்கு இணங்குவதற்கான சட்டமாகும். இது விவசாயிகள் தங்கள் தோட்டங்களிலிருந்து விதைகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்வதையும் விற்பதையும் தடுக்கும் சட்டமாகும். இது உள்ளூர் விவசாயிகளைச் சர்வதேச வேளாண் வணிக நிறுவனங்களுக்கு அடிபணிய வைக்கிறது; அதுமட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களின் விதைகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் ஏகபோகமாக விநியோகிக்கவும் இது வழிவகுக்கும்.
  4. ஐ.எஸ்.டி.எஸ். (முதலீட்டாளர்-நாடு தகராறு தீர்வு [Investor–State Dispute Settlement]) வழங்குவதன் மூலம், இந்த சி.பி.தி.பி.பி.ஏ. உடன்படிக்கையானது, அரசாங்கம் அறிமுகம் செய்யும் ஏதேனும் புதிய சட்டம் அல்லது கொள்கை, முதலீட்டாளர்களின் இலாபத்தைப் பாதிக்கும் என ‘நம்பப்பட்டால்’, மலேசிய அரசாங்கத்தின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அரசாங்கம் இழப்பீடு வழங்கத் தவறினால், மலேசிய அரசு அல்லது வெளிநாடுகளில் உள்ள ஜிஎல்சி-க்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்படும்.
  5. இந்த சி.பி.தி.பி.பி.ஏ. உடன்படிக்கையானது, ‘சரிசமமான சேவை`யைக் கோருவதால், உள்ளூர் வர்த்தகர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட உதவும் எந்தவொரு உறுதியான கொள்கைகளையும் தடுக்கும். ஆகவே, பொதுத் தேர்தல் அறிக்கை மற்றும் அனைத்து திட்டமிடப்பட்ட கொள்கைகளும் உள்ளூர் மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என நம்பப்பட்டால், அவை அனைத்திற்கும் சவால் விடப்படும்.

“எனவே, சி.பி.தி.பி.பி.ஏ.-யிலிருந்து வெளியேறுவது, அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்றுள்ள புதிய தலைமையின் முதல் பணியாக இருக்க வேண்டுமென, பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து பி.எஸ்.எம். வலியுறுத்துகிறது,” என சிவராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்கான எந்தவொரு மறுமதிப்பீடும், துல்லியமான ஆய்வு மற்றும் நாடாளுமன்ற விவாதம் மூலம் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சி.பி.தி.பி.பி.ஏ. உடன்படிக்கையில் பங்கேற்பது தேசிய இறையாண்மை தொடர்பான பிரச்சினைகளை உள்ளடக்கியது என்பதால், அரசாங்கமும் நாடாளுமன்றமும் இதனைக் கவனமாக கையாள வேண்டுமென சிவராஜன் கேட்டுக்கொண்டார்.