படாங் செராய் வெற்றி பிரதமருக்குச் சிறந்த பரிசாக இருக்கும் – ஹராப்பான் வேட்பாளர்

15வது பொதுத் தேர்தலில் (GE15) படாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவது பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராகிமுக்கு சிறந்த பரிசாக இருக்கும் என்று ஹராப்பான் வேட்பாளர் முகமது சோபி ரசாக் கூறினார்.

வெற்றியை உறுதி செய்ய, அப்பகுதி வாக்காளர்களைக் கவர அவரும் கூட்டணி தேர்தல் இயந்திரமும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், விசயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“கடந்த சில நாட்களாக எனது பிரச்சாரத்தில், ஹராப்பானுக்கு படாங் செராய் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு அளிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன், ஏனெனில் இந்த வெற்றி அன்வாருக்கு இங்குள்ள மக்கள் அளித்த பரிசாக இருக்கும்”.

“இந்தப் பிரச்சார காலத்தில் படாங் செராய் வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று சந்தையில் பிரச்சாரம் செய்யும்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

வியாழன் அன்று, மாமன்னர் முன் அன்வார் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில், கெடா ஹராப்பான் செயலாளரான சோஃபீ, முன்னாள் படாங் செராய் வேட்பாளர் விட்டுச் சென்ற இடத்தை எடுத்துக் கொள்ளப்போவதாகக் கூறினார், மேலும் மறைந்த எம்.கருப்பையா தொகுதியில் ஒரு சிறந்த சாதனையைக் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.

நவம்பர் 16ஆம் தேதி மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்த கருப்பையா (69) என்பவருக்குப் பதிலாக வழக்கறிஞர் சோஃபி(Sofee) 47 நியமிக்கப்பட்டார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, படாங் செராய் தொகுதிக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 7-ஆம் தேதிக்கும், முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 5-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருப்பையா 8,813 வாக்குகள் பெற்று GE14 இல் நாடாளுமன்ற இருக்கையை வென்றார், முகமட் சோப்ரி ஒஸ்மான் (PAS) மற்றும் லியோங் யோங் காங் (BN) ஆகியோரை தோற்கடித்தார்.