‘நிதியை வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி’ – புதிய கார், அலுவலக புதுப்பிப்பு தேவையில்லை – அன்வார்
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம், அரசு நிதியை வீணாக்காத கலாசாரத்தை உருவாக்க விரும்புவதால், தனது பயன்பாட்டிற்காக புதிய அதிகாரப்பூர்வ கார் வாங்கப்பட மாட்டாது, அல்லது தனது அலுவலகத்தில் எந்த புதுப்பிப்பும் மேற்கொள்ளப்படாது என்று நேற்றிரவு கூறினார்.
“நீங்கள் எதைச் சேமிக்க முடியும் என்று சிந்தியுங்கள் – RM100, RM1,000, RM10,000 – இவை ஏழைகளுக்கு சேர வேண்டும். நான் சம்பளம் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் தொடங்கினேன், அதோடு நம்மிடம் உள்ள நிதியை வீணாக்காமல் இருப்பதும் முக்கியம்.
“தற்போதைய சூழ்நிலையில், நாம் ஒரு புதிய கலாச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள அனைத்து துறைத் தலைவர்களுக்கும்தான் இந்தச் செய்தி. அரசு பணத்தை நமது சொந்த வசதிக்காக பயன்படுத்த வேண்டாம்,” என்றார்.
கடந்த வாரம் பதவியேற்ற பிகேஆர் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிர்வாகங்களில் பொதுவான பண விரயத்தைத் தவிர்த்து அனைத்து அரசாங்கப் பணத்தையும் மக்களுக்காக திறமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
காஜாங்கில் உள்ள சுங்கை லாங்கில் உள்ள அஷாபுஸ் சோலிஹின் பள்ளிவாசலில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசினார்.
இன்று, அன்வார் புத்ராஜெயாவில் அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார், இது உயரும் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தும்.
அவர் காலையில் புத்ராஜெயாவில் உள்ள பங்குனன் பெர்டானா புத்ராவில் 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கைச் செலவுக்கான சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வார்.
தம்புன் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வார், வாழ்க்கைச் செலவைக் கட்டு படுத்துவதே பிரதமராக இருக்கும் தனது முன்னுரிமையாக இருக்கும் என்றார்.
பிரதமரின் சம்பளத்தை ஏற்க மறுத்த அவர், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் அலாவன்ஸ் (கொடுப்பனவை) மட்டுமே ஏற்றுக் கொள்வார்.