இராகவன் கருப்பையா- நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாரிசான் ஆட்சி பீடத்தில் இருந்தும், ம.இ.கா.வைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த வாரம் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.
பாரிசான் கூட்டணி பக்காத்தானுடன் இணைந்து ஒன்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் ம.இ.கா. அந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியை வைத்துக் கொண்டு வெறும் துரும்பாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் தமது புதிய அமைச்சரவையில் இந்தியப் பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கு பிரதமர் அன்வாருக்கு நிறையத் தேர்வுகள் உள்ளன. தமது பி.கே.ஆர். கட்சியில் 4 பேரும் ஜ.செ.க.வில் 6 பேருமாக மொத்தம் 10 பேர் பக்காத்தானின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் ம.இ.கா.வை அவர் எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
இந்த 10 பேருமே சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள, ஆற்றல் மிக்க, துடிப்பானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வெறும் வாய்ப் பேச்சி வீரர்கள் அல்ல. எனவே அவர்களில் இருந்துதான் அன்வார் தமதுத் தேர்வை செய்வார் என்பது உறுதி.
அமைச்சரவையில் இருந்து ம.இ.கா. விடுபடுவதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான்.
அதாவது தேர்தலுக்குப் பின் அன்வாரும் முஹிடினும் ‘நீயா? நானா?’ எனும் போராட்டத்தில் ஈடுபட்டிந்த சமயத்தில் சில அம்னோ பிரதிநிதிகள் தனக்கு ஆதரவளிப்பதாக முஹிடினே ஒப்புக் கொண்டிருந்தார். இந்தக் கும்பலோடு ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் ரகசியமாக சேர்ந்து கொண்டதாக நம்பப்படுகிறது.
வெறும் மலாய்க்காரர்களை மட்டுமே கொண்டுள்ள அந்தப் பக்கம் சாய்ந்தால்தான் போட்டியே இல்லாமல் அமைச்சர் பதவி கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளளாம் என ம.இ.கா. தலைமைத்துவம் எண்ணியிருக்கக் கூடும்.
கடைசியாக பாரிசான் தலைவர் ஸாஹிட் ஹமிடி ஒட்டு மொத்தக் கூட்டணியும் பக்காத்தானுக்கு ஆதரவளிக்கும் என அறிவித்ததைத் தொடர்ந்து ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ எனும் கதையாக எல்லாருமே இந்தப் பக்கம் வந்தார்கள்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக ம.இ.கா தலைவர் விக்னேஸ்வரன் செய்த சீரற்ற அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் கேலிக் கூத்தான ஒன்றாக பகிரப்பட்டு வருகிறது.
புதிய அரசாங்கத்தில் ம.இ.கா. இடம் பெறாது என அவர் செய்த முதல் அறிவிப்பானது, ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற உவமையைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 2 நாள்கள் கழித்து, ‘புதிய ஆட்சியில் ம.இ.கா. அமைச்சர் பதவிகளைக் கோராது, ஆனால் அழைக்கப்பட்டால் அதனை ஏற்கத் தயார்’ என விக்னேஸ்வரன் தடம் மாறிப் பேசியதை பொது மக்கள் தமாஷாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே இந்திய சமூகத்திற்கென பழைய அரசாங்கம் தொடங்கிய திட்டங்களும் முயற்சிகளும் தடையின்றித் தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
ஆனால் இந்திய சமூகத்திற்குத் தேவையான புதியத் திட்டங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து அன்வாருக்கு அலோசனை வழங்குவதற்கு ம.இ.கா.தயாராய் உள்ளது என்று அவர் குறிப்பிட்டதுதான் ஏற்புடையதாக இல்லை.
புதிய அரசாங்கத்தின் கீழாவது நமக்கு நல்லகாலம் பிறக்காதா என்று நம் சமூகம் ஏங்கித் தவித்துக் காத்திருக்கும் இவ்வேளையில் மீண்டும் ம.இ.கா. மூக்கை நுழைப்பதை வெகுசன மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை அன்வாரும் நன்கு தெரிந்து வைத்திருப்பார்.
காலங்காலமாக ம.இ.கா.வை நம்பி பட்டதெல்லாம் போதும் எனும் நிலைப்பாட்டில் இந்திய சமூகத்தினர் ஒட்டு மொத்தமாக அக்கட்சியை ஒதுக்கியுள்ளது அன்வாருக்குத் தெரியாதா என்ன!
அப்படியே பாவம் புண்ணியம் பார்த்து அவர்களை சேர்த்துக் கொள்ள அன்வார் முயன்றால் நம் சமூகத்தின் தேவையில்லா சீற்றத்திக்குதான் அவர் ஆளாவர் .
எனவே ம.இ.கா. தலைமைத்துவம் இத்தகைய வீண் விதண்டாவாதங்களை எல்லாம் ஒரு புறும் ஒதுக்கிவிட்டு படு பாதாளத்திற்கு சரிந்துள்ள அதன் பலத்தை மீட்சி பெறச் செய்வதற்கான புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவதே சாலச் சிறந்தது.
எப்படியாவது அமைச்சரவையில் இடம் பிடித்துவிடலாம் எனும் பகல் கனவில் லயித்து பொன்னான நேரத்தை அவர்கள் வீணடிக்கக் கூடாது.