இராகவன் கருப்பையா – ‘ருசி கண்டப் பூனை’களாக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் சொகுசு வாழக்கையை அனுபவித்தக் கும்பல், ‘அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’, என்பதைப் போல தற்போது ‘வழி மேல் விழி வைத்து’க் காத்துக் கிடப்பது அன்வாருக்கும் நன்றாகவேத் தெரியும்.
கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியில் கொல்லைப் புறமாக நுழைந்து பக்காத்தானின் நல்லாட்சியைக் கவிழ்த்தக் கூட்டத்தில் முஹிடினும் பாஸ் தலைவர் ஹாடியும் முக்கியப் பங்காற்றியது எல்லாரும் அறிந்த ஒன்றே.
நாட்டை உலுக்கிய கோறனி நச்சிலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் தனது பிரதமர் பதவியை தற்காப்பதில் மட்டுமே குறியாய் இருந்து அவசர காலத்தைப் பிரகடணப்படுத்தி, நாடாளுமன்றத்தையும் கூட அடைத்து வைத்த முஹிடினின் அராஜகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
‘கெராஜான் காகால்'(தோல்வியுற்ற அரசாங்கம்) என நாடு தழுவிய நிலையில் மக்கள் புரட்சி எழத்தொடங்கியதால் ஆட்சியில் ஆதரவை இழந்து அவர் பதவி துறக்க நேரிட்டது.
தற்போது அன்வாரின் அரசாங்கம் நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமானது என குறை கூறும் அவர் தனது சொந்த முதுகைத் திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லவா?
எது எப்படியாயினும் நிறைய பேர் மாறுபட்டக் கருத்தைக் கொண்டிருந்த போதிலும், நிலையான ஆட்சி அமைப்பதிலும் பொருளாதார மீட்சியிலும் அன்வார் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
நிதியமைச்சை ஒரு புதியவரிடம் ஒப்படைப்பதை விட தாமே அதனை நிர்வகித்தால் வெளி நாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதையும் அவர் நன்கு உணர்ந்துள்ளார்.
எல்லா நேரத்திலும் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பெரிக்காத்தான் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த தெங்கு ஸஃப்ருல் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்படுவார் என கடைசி நேரத்தில் ‘அரசல் புரசலாக’ செய்திகள் வெளியாயின. ஆனால் அவரை அனைத்துலக வர்த்தக, தொழில் துறை அமைச்சராக அன்வார் நியமித்துள்ளார்.
முன்னைய பக்காத்தான் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ஸுல்கிஃப்லியிடம் கோல சிலாங்கூர் தொகுதியில் தோல்விடைந்த தெங்கு ஸஃப்ருலின் பெயர் அம்னோ பரிந்துரைத்தப் பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் தவிர்க்க இயலாதத் தலையீட்டால் அன்வார் அவரை அமைச்சரவையில் நியமனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
அடிப்படையில் அவர் ஒரு அரசியல்வாதியே கிடையாது. சி.ஐ.எம்.பி. பொருளகத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியான அவரை முஹிடின் செனட்டராக்கி அமைச்சராக்கினார்.
அரசியலில் ஈடுபடப் போவதில்லை, தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றெல்லாம் தனது அமைச்சர் பதவிக் காலத்தின் போது கூறி வந்த அவருக்கும் கடைசி நேரத்தில் அரசியல் ஆசை வந்தது வியப்புதான்.
சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சையும் அன்வார் தமது வட்டத்திற்குள்ளேயே வைத்துள்ளார். பி.கே.ஆர். கட்சியின் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோனை செணட்டராக்கி அவரிடம் அந்த அமைச்சை ஒப்படைத்துள்ளார்.
அதே போல பொருளாதார அமைச்சராக பி.கே.ஆரின் துணைத்தலைவரான தமது தளபதி ரஃபிஸி ரம்லியை நியமித்திருக்கிறார்.
மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட ஜ.செ.க.வுக்கு ஒரு இந்தியர் உள்பட 4 பதவிகளை மட்டுமே ஒதுக்கியுள்ள அன்வார், 31 உறுப்பினர்களைக் கொண்ட தமது பி.கே.ஆர். கட்சியிலிருந்து 8 பேருக்கு பதவி வழங்கியுள்ளார்.
பி.கே.ஆர். ஒரு பல்லினக்கட்சி என்ற போதிலும் பிரதமர் உள்பட அந்த 8 பேருமே மலாய்க்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமது சொந்தக் கட்சியியே புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு அன்வார் இதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியரான பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவமுடைய, சர்ச்சையில்லாத ஒருவராவார்.
மித்ரா முறைக்கேடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான அவர் மனிதவள அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
ஒரு போராட்ட வீரரான அன்வாரின் இந்த புதிய அமைச்சரவையை மனப்பூர்வமாகவும் மானசீகமாகவும் ஏற்றுக் கொண்டு, அதே சமயம் நமது உரிமைகளை விட்டுக் கொடுகாமல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாம் கவனம் செலுத்தே விவேகமானச் செயலாக இருக்கும்.