அன்வார் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் – BN  தலைவர்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் பல கட்சிகள் விரைவில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று BN பொதுச்செயலாளர் ஜாம்ப்ரி அப்துல் காதிர்(Zambry Abdul Kadir) தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்கு உட்பட்டதாகவும், ஒப்பந்தத்தின் வரைவு முன்மொழிவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

“அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவதற்கான இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தை நாங்கள் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம்.  இல்லையெனில், எங்களுக்கு இந்த வகையான கூட்டணி இருக்காது. இந்தக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்”.

“நாங்கள் பல தொடர் விவாதங்களை நடத்தியுள்ளோம், இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தின் இறுதி வரைவுக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று என்னால் கூற முடியும்,” என்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார், என மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

அவரைப் பொறுத்தவரை, அரசாங்கத்தில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் சேரும், இது புதிய நிர்வாகத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசாங்கம் முழு காலத்துக்கு நீடிப்பதை உறுதி செய்வதற்கும், கட்சிகள் அந்தந்த தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

“இது நிச்சயமாகப் பல கட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும், இரண்டு மட்டும் அல்ல, நான் இரண்டுக்கு மேல் கூறுவேன், அதாவது மூன்று அல்லது நான்கு இருக்கலாம். அனைத்து கட்சிகளும் ஒன்றாகக் கையெழுத்திடும்.”

அன்வார் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, கபுங்கன் பார்ட்டி சரவாக் மற்றும் கபுங்கன் ராக்யாட் சபா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அன்வாரின் கூற்றுப்படி, அவரது அரசாங்கத்தில் வாரிசன், பார்ட்டி பங்சா மலேசியா (PBM) மற்றும் சுயாதீன சட்டமியற்றுபவர்களும் அடங்குவர்.

இதன் அடிப்படையில், 148 எம்.பி.க்கள் அன்வாரின் பிரதமர் பதவிக்கு ஆதரவாக உள்ளனர், அதாவது அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.