ஜொகூர், கங்கார் பூலாய் வட்டாரத்தில் இயங்கிவரும் காரைநகர் நட்புறவு மையம் மற்றும் மைஸ்கீல்ஸ் அறவாரியம் இணைந்து, 2022 மாணவர் தன்னாளுமை முகாமினை ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று காலை, பிரிமுஸ் வெல்நஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் இணை நிறுவனருமான செல்வமலர் செல்வராஜூ, சிறப்புரையாற்றி முகாமினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தொடக்க விழாவில், தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட செ. செல்வமலர், பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், அதனால் மாணவர்களிடையே ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேசினார்.
எதிர்வரும் டிசம்பர் 24 வரையில், 14 நாட்களுக்குக் காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெறவுள்ள இம்முகாமின் தொடக்க விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த பெற்றோர்கள், சமூக ஆர்வளர்கள், மாணவர்கள் என சுமார் 130 பேர் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து, இடைநிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்கள், கல்வியைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் குறைந்த ஆளுமை கொண்ட மாணவர்களிடையே தன்னாளுமையை மேம்படுத்தவும் இம்முகாம் வழிவகுக்கும் என முகாமின் ஒருங்கிணைப்பாளர் திரு செல்வராஜ் ஞானபிரகாசம் தெரிவித்தார்.
“கல்வியில் சற்று பின்தங்கிய, பி40 குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களே எங்களின் முகான்மை இலக்கு. இந்த 14 நாட்களில் இம்மாணவர்களிடம் தன்னம்பிக்கையை விதைப்பதோடு; அவர்களிடையே பேச்சாற்றலை வளர்ப்பதுவும் இலைமறைகாயாய் ஒளிந்திருக்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதுமே எங்களின் தலையாய நோக்கம் ஆகும்,” என அவர் சொன்னார்.
பேச்சு திறன், சமுக அக்கறை, தலைமைத்துவப் பண்பு, இயற்கையை நேசித்தல் மற்றும் மனித உரிமை போன்ற அடிப்படை கூறுகளைக் கற்றுக்கொடுப்பதோடு, வெளி நடவடிக்கைகளிலும் இம்மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மாணவர்களை வழிநடத்தவும் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் சமூக உணர்வு கொண்ட, தேர்ச்சி பெற்ற 15 பயிற்றுநர்கள் முன்வந்திருப்பது பெருமிதமானது எனவும் அவர் கூறினார்.
கங்கார் பூலாய், தெப்ராவ் தோட்டம், தாமான் துன் அமீனா, ரினி தோட்டம், கூலாய் ஓயில் பால்ம் தோட்டம் ஆகியத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 34 ஆறாம் ஆண்டு மாணவர்களும், புக்கிட் இண்டா, கங்கார் பூலாய், கூலாய், தாமான் யூனிவர்சிட்டி ஆகிய இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 14 மாணவர்களும் இவ்வாண்டு முகாமில் கலந்துகொண்டுள்ளனர். இந்த 14 மாணவர்களும் கடந்தாண்டு முகாமில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கான தொடர் நடவடிக்கைகளில் இம்முகாமும் அடங்கும்.
பள்ளி விடுமுறையை மாணவர்கள் பயனான வழியில் செலவழிக்க இதுபோன்ற முகாம்கள் உதவும். இந்த மாணவர் தன்னாளுமை முகாம் ஜொகூர், காரைநகர் நட்புறவு மையம் மட்டுமின்றி, சிலாங்கூர், கலும்பாங்கில் அமைந்துள்ள மைஸ்கீல்ஸ் அறவாரியத்திலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.