கி.சீலதாஸ் – பிரதமர் அன்வர் இபுராஹீம் தமது அமைச்சரவையை அறிவித்துவிட்டார். முன்னாள் பிரதமர் இஸ்மாயில் பிரதமராக நியமிக்கப்பட்டபோது அவர் அந்தப் பதவியில் தொடர்வதற்குத் துணையாக இருந்தவர்கள் யாவருக்கும் அமைச்சர் பதவியையும் மேலும் பல தரமான பொறுப்புகளோடு நல்ல வருவாய் தரும் பதவிகளில் அமர்த்தி தன் பதவியைத் தற்காத்துக் கொண்டார். அன்வர் இபுராஹீமின் அமைச்சரவை மெச்சத்தக்க அளவில் கச்சிதமாக உள்ளது. ஆனால், சர்ச்சைக்கு வழிவிடுகிறது.
பதினைந்தாம் பொதுத் தேர்தலின்போது ஊழல் அழிக்கப்பட வேண்டும், ஊழல்வாதிகளுக்கு இனி இடம் இல்லை என்று சொல்லப்பட்டது. பிரச்சாரம் செய்யப்பட்டது. நான் கூட பல நண்பர்களுக்குத் தனிப்பட்ட முறையில், வாக்களிக்கும் போது ஊழல்வாதிகளை உள்ளே விடாதீர்கள் என்று நினைவுப்படுத்தினேன். “மாட்டோம்” என்று சொன்னவர்கள் ஏராளம். அவர்கள் மலேசியர்கள். ஆனால், நடந்தது என்ன?
பொதுத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் நடுவண் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போயிற்று. தொங்கு நாடாளுமன்றம் தான் அமைந்தது. தொங்கு நாடாளுமன்றம் என்றால் அது ஒன்றும் புதிதல்ல. பல நாடுகளில் தொங்கு நாடாளுமன்றம் இயங்குகின்றன, அரசு செயல்படாமல் இல்லை.
தொங்கு நாடாளுமன்றம் என்றால் அரசு நினைத்ததைச் செய்ய இயலாது. எல்லா கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இல்லையேல் ஆட்சி கவிழும். அதுதான் இந்த நாட்டில் இருபதாம் ஆண்டிலிருந்து இருபத்திரண்டாம் ஆண்டு வரை நடந்தது. இருபதாம் ஆண்டு பிப்ரவரி திங்களில் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது நினைவிருக்கும்.
அந்தக் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் முகைதீன். அப்பொழுது அவரைப் போற்றாதவர்கள் எவரும் இல்லை. துன் டாக்டர் மகாதீர் முகமதுக்குக் வழங்கப்பட்ட புகழாரம் முகைதீனுக்கும் கொடுக்கப்பட்டது.
மகாதீர் முகம்மது பிரதமர் என்ற முறையில் எடுத்த சில முடிவுகள் சிறுபான்மையினரைப் பாதித்தப்போதிலும் அதைப் பொருட்படுத்தாதவர்களைத்தான் காண முடிந்தது. அப்படிப்பட்ட போக்கு நமக்கு அதிர்ச்சியாக இருந்தபோதிலும் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் இனியும் நடக்காது என்ற நம்பிக்கை மேலிடவே மகாதீரின் தகாத, குறும்புத்தனமான நடவடிக்கையைக் கண்டும் காணாதவர்கள் போல் இருந்தவர்களை நமக்குத் தெரிந்தது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது ஊழலை ஒழிப்பதாகும். ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற முழக்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்குப் பலத்த அடியைக் கொடுத்தது. நடுவண் ஆட்சி அமைப்போம் என்று மார்தட்டிய தேசிய முன்னணி தேர்தலில் தமக்குக் கிடைத்த முப்பது தொகுதிகளைக் கொண்டு தமது அரசியல் வாழ்வைத் தற்காத்துக் கொள்ள தீர்மானித்தது.
முகைதீன் அமைத்த கூட்டணி எழுபத்திரண்டு இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அது பல கட்சிகளோடு இணைந்து நடுவண் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற அதன் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.
முகைதீனின் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது எப்படி என்ற கேள்வி எழும்புகிறது. பெரும்பான்மையான கருத்துக்கள், கண்டுபிடிப்புகள், பதினெட்டு வயதினரின் வாக்குப் பதிவு, அதில் பெரும்பான்மையினர் சமயப் போதனையால் பாதிப்புற்றவர்கள் என்ற கருத்தும் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மையான கணிப்பாக இருந்தாலும் முழுமையானதென ஏற்றுக்கொள்ள முடியாது.
மலேசியர்கள் ஊழலை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. அது 2018ஆம் ஆண்டே நிரூபனமாயிற்று. ஆனால், நிரூபிக்கப்பட்டதே தவிர அதை ஒழிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்குள் முகைதீனின் சூழ்ச்சி வெற்றி, நம்பிக்கை கூட்டணி கவிழ்ந்தது.
அடுத்து, ஊழலுக்கு முக்கியக் காரணி தேசிய முன்னணியாகும். அதற்குத் தலைமை ஏற்ற அம்னோவாதிகள் என்பதும் தெளிவான நிலையில் அது முகைதீனுடன் இணைந்து நம்பிக்கைக் கூட்டணி கவிழ உடந்தையாக இருந்தது. அத்தகைய போக்கினை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை பெரும்பான்மையான வாக்காளர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள். அம்னோவின் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஒரு பாடம் கற்பிக்கும் தீர்ப்புதான் அதன் படு தோல்வி. அம்னோவின் மீது இருந்த கோபம் தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம். அது ஒருவகையில் முகைதீனின் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதாவது எந்தக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத போது நாட்டின் நலனைக் கருதி தேர்தலின்போது பரமவிரோதிகளாகச் செயல்பட்டவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றுபட்டு அரசமைப்பது மலேசியர்கள் காணும் முதல் அனுபவம் எனலாம்.
தேசிய முன்னணி மற்றும் சில கட்சிகளின் ஆதரவோடு நடுவண் ஆட்சியை அமைத்து அன்வர் இபுராஹீம் தமது அமைச்சரவையில் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பெற்று, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படும் ஒருவருக்கு முதல் துணைப் பிரதமர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அன்வாரின் விவேகத்தையும் கேள்விக்குறியாகிவிட்டது என்றால் மிகையாகாது.
சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டத்தோ ஶ்ரீ சாஹிட் அகமது ஹமீடியானது துணைப் பிரதமரின் தரத்தை, மதிப்பை உணர்ந்து அதை ஏற்க மறுத்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. அதுவும் கவலைக்குரிய விஷயம்தான்.
ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லை என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிட்டதானது மலேசியர்களைச் சந்தேகத்திலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கிறது. இது போதாது என்பது போல் முன்னாள் நிதி அமைச்சர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படுகிறது.
இது விசித்திரமான அணுகுமுறையாகும். இதை ஆதரிப்போர் கூறும் காரணம் என்ன? நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு நல்கும் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமை ஆட்சியைத் தற்காத்துக் கொள்வதே. இது மக்களைத் திருப்திபடுத்துமா?
இந்தப் பொதுத் தேர்தலின் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்காவிட்டாலும் இதே நிலை வரும் தேர்தல்களிலும் நீடிக்கும் என்று நம்பலாம். ஒருவகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இன, சமய அரசியலுக்கு இனிமேலும் இடமில்லை என உணர்த்துவதாகக் கூட கருதலாம்.
இந்நாட்டின் ஆட்சியாளர்கள் கூட ஒருமித்த குரலில் இன, சமய பேச்சுக்கள் அத்துமீறிய கட்டத்தை அடைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அது நிறுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருப்பது மலேசியர்களும் ஆட்சியாளர்களும் உணர்ந்ததை இன, சமய வாதத்தை அரசியலாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் உணராதது அதிசயமே!
அம்னோ பாரு இனிமேலும் தமது பழைய அரசியல் வழிகளைத் தொடர விரும்பினால் நாற்பதுகளின் இறுதி கட்டத்தில் டத்தோ ஓன் ஜபார் சொன்னது போல் அம்னோ வெறும் மலாய்க்காரர்களின் இயக்கமாக இருப்பதை மாற்றி மலாயர்களின் இயக்கமாக மாற வேண்டும்.
இப்பொழுது மலேசியர்களின் இயக்கமாக மாற வேண்டும். குறுகிய இன, சமய வாதம் பல்லின மக்கள் வாழும் மலேசியாவுக்குப் பொருந்தாது. ஆபத்தான போக்காகும். அதை உணர்ந்து செயல்பட்டால் அதன் எதிர்கால அரசியல் வாழ்வு பாதிப்புறாது.
இந்தப் பதினைந்தாம் பொதுத் தேர்தல் மலேசியர்களைப் பிரிக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தரத்தைக் கொண்டிருப்பதாகக் கூட சொல்லலாம். இன, சமயவாதிகள் வெறுமனே இருக்கமாட்டார்கள். அவர்களின் ஆபத்தான செயல்களைத் தடுக்க சட்டம் தேவை.
இந்த அரசு அந்த நல்ல காரியத்தைச் செய்யுமா? செய்தால் மலேசியாவுக்கு நன்மை, மலேசியர்களிடம் ஒற்றுமை உணர்வு வலிமை பெறும். வெறும் ஒற்றுமை அரசை உருவாக்கினால் போதாது. மக்கள் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும், பலப்படுத்த வேண்டும். அதுவே இந்த அரசின் தலையாயப் பொறுப்பு எனின் அதுதான் உண்மை.