அன்வார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்னவாகும்?

டிசம்பர் 19 அன்று நடைபெறவிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் நம்பிக்கை வாக்கெடுப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தெளிவான உத்தரவுகளைப் பெறவில்லை.

இதை ஜெலேபு எம்பி ஜலாலுதீன் அலியாஸ் (மேலே) வெளிப்படுத்தியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

இதுவரை எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றாலும், அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக அனைத்து 30 பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆதரிப்பார்கள் என்று ஜலாலுதீன் உறுதியாக நம்புகிறார்.

இதற்குக் காரணம், கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராக எம்.பி.க்கள் செயல்படுவதைத் தடுக்கும் “கட்சி தாவல் தடுப்பு ” சட்டங்கள் மற்றும் ஒவ்வொரு கூறு கட்சியின் விதிகளும் ஆகும்.

“(பிரதமருக்கு) ஆதரவளிக்க ஏன் அறிவுறுத்தல்கள் இருக்க வேண்டும்? அனைத்து எம்.பி.க்களும் ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

“நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல, மாறாக, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நேரம் இது.”

“அரசு அமைப்பதில் நாங்கள் ஒப்புக்கொண்ட அரசாங்கத்தை தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று அந்த அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் மேலும் கூறினார்.

அன்வாருக்கு எம்.பி.க்களின் ஆதரவை சோதிக்கும் தீர்மானம் டிசம்பர் 19-ம் தேதி டேவான் ராக்யாட் கூடும் போது தாக்கல் செய்யப்படும்.

டேவான் ரக்யாட்டின் முதல் நிகழ்ச்சி நிரலான புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் போது அன்வாரின் ஆதரவு உடனடியாக சோதிக்கப்படும் என்பதால் இது முற்றிலும் அடையாள நடவடிக்கையாக இருக்கும்.

அன்வார் ஏற்கனவே பக்காத்தான் ஹராப்பான், பிஎன் மற்றும் காபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) ஆகியவற்றின் எம்.பி.க்களை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைத்துள்ளார் – மூன்று பெரிய கூட்டணிகளான 135 எம்.பி.க்கள் உள்ளனர்.

கபுங்கன் ரக்யாத் சபா (ஜிஆர்எஸ்), பார்ட்டி கேசெஜஹ்டெரான் டெமோக்ராடிக் மஸ்யராகத், பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) மற்றும் இரண்டு சுயேட்சை உறுப்பினர்களும் அன்வாருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

பெரிக்காத்தான் கட்சியினர்  பிரேரணையை நிராகரிக்க விரும்புகிறார்கள்.

இதற்கிடையில், தசெக் கெலுகோர் பாராளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜன் சினார் ஹரியனிடம் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என்று கூறினார்.

தசெக் கெலுகோர் எம்பி வான் சைபுல் வான் ஜன்

“தனிப்பட்ட முறையில், நான் பிரேரணையை நிராகரிப்பேன்,  நாங்கள் அன்வாருக்கு ஆதரவளிப்போம் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.

“அன்வார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அது எம்.பி. என்ற முறையில் எனது உரிமை” என்று அந்த பெர்சத்து தகவல் தலைவர் கூறினார்.

டிசம்பர் 19 அமர்வு ஒரு உற்சாகமான விவகாரமாக இருக்கும் என்றும் சைபுல் எதிர்பார்த்தார்.

“அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அவரது துணை முகமட் ஹசன் ஆகியோர் அன்வாருக்கு எவ்வாறு ஆதரவளிப்பார்கள் என்பதை நான் உண்மையில் பார்க்க விரும்புகிறேன்.

“அம்னோ உறுப்பினர்கள் இதற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதையும் பார்க்க விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.