இராகவன் கருப்பையா –கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு அரசாங்கத்தை அநியாயமாகக் கவிழ்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் தவளைகள் தற்போது ‘காலொடிந்த’ நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத, ‘ஷெரட்டன் நகர்வு’ எனப்படும் அச்சம்பவத்தை வெற்றிகரமாக அரங்கேற்றியக் கும்பலில் முக்கியப் பங்காற்றியவர்கள் கடந்த மாதம் நடந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்கள். இது, வஞ்சிக்கப்பட்ட வாக்காளர்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்றால் அது மிகையில்லை.
வாய்மையே வெல்லும், வாக்குரிமையின் பலமே வெல்லும், எனும் நிதர்சனத்தை உதாசினப்படுத்திய அந்த சுயநலப் பேர்வழிகளுக்கு மக்கள் சரியானப் பாடம் கற்பித்துள்ளனர்.
குறிப்பாக பக்காத்தானுக்கு அப்போது துரோகமிழைத்த முன்னாள் பிரதமர் மகாதீர், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் மற்றும் அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுராய்டா போன்றோர் அடைந்தத் தோல்விகளை மக்கள் சந்தோசமாகக் கொண்டினார்கள்.
பி.கே.ஆர். கட்சியின் துணைத்தலைராக இருந்த அஸ்மினும் உதவித் தலைவராக இருந்த ஸுராய்டாவும் சேர்ந்து மேகா சதித்திட்டம் ஒன்றைத் தீட்டி மேலும் 9 பேரை வசீகரப்படுத்திக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறியது எல்லாரும் அறிந்த ஒன்றே.
நம்பி வாக்களித்த பொது மக்கள் ஒன்றும் செய்ய இயலாமல் கோபத்திலும் சோகத்திலும் மூழ்கிக் கிடந்த வேளையில் அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கவிழ்த்த மகிழ்ச்சியில் தீபகற்ப மலேசியாவில் 8 பேரும் கிழக்கு மலேசியாவில் 3 பேருமாக இந்த 11 துரோகிகளும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
கொல்லைப்புற ஆட்சியின் நாயகனான முஹிடின், தனது புதிய அரசாங்கத்தில் இணைந்த அவர்கள் அனைவருக்கும் வெகுமதியாக, அமைச்சர் பதவிகளையும் இதர அரசாங்கப் பதவிகளையும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார்.
எனினும் அவர்களுடைய மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாமே கடந்த மாதம் 19ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. அரசியல் தவளைகளின் கும்பலுக்குத் தலைவன் என்று வர்ணிக்கப்பட்ட அஸ்மின் தனது கோம்பாக் தொகுதியில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் படுதோல்வியடைந்தார்.
அதே போல ஸுராய்டா தனது அம்பாங் தொகுதியில் பி.கே.ஆர். கட்சியின் ரோட்ஸியாவிடம் மிக மோசமானத் தோல்வியைத் தழுவி வைப்புத் தொகையையே இழந்தார்.பணத்திற்கும், பதவிகள் மீது மோகம் கொண்டும், மிகுந்த பேராசையில் இவ்விருவரையும் பின் தொடர்ந்த மன்சோர் ஓஸ்மான் நிபோங் தெபாலிலும், ரஷிட் ஹஸ்னோன் பத்து பஹாட்டிலும் சினம் கொண்ட மக்களால் நிராகரிக்கப்பட்னர்.
அதே போல கமாருடின் ஜஃபார் பண்டார் துன் ரஸாக் தொகுதியில் அன்வார் மனைவி வான் அஸிஸாவிடம் தோல்வி கண்டார்.
அதிகப்பிரசங்கித்தனமாக இந்தக் கும்பலுடன் இணைந்த செகாமாட் தொகுதியின் சந்தரக்குமார் அந்தப் பக்கமே தலைகாட்ட துணிச்சல் இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே இல்லை.தொகுதி வாக்காளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் கட்சிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் அநேகமாக கடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
தற்போதைய நிலையை வைத்துத் பார்த்தால் அவருடைய குறுகிய கால அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைப் போலவே தெரிகிறது.இப்படியாக மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த பெரும்பாலோர் இத்தேர்தலில் துடைத்தொழிக்கப்பட்டனர்.
மேற்கு மலேசியாவில் பக்காத்தானின் நம்பிக்கை துரோகிகள் பட்டியலில் இடம்பெற்றவர்களில் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது முன்னாள் வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா மட்டுமே.அவர் போட்டியிட்ட பஹாங்கின் இந்திரா மக்கோத்தா தொகுதியை சற்றுக் குறைந்த பெரும்பான்மையில் மீண்டும் தற்காத்துக் கொண்டார்.
இவை அனைத்துக்கும் மூலக் காரணமாக இருந்த மகாதீர் தனது சொந்த மாநிலமான கெடாவின் லங்காவி தொகுதியில் வைப்புத் தொகையை இழந்து பெருத்த அவமானத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.