மூளைத் திறனுடையோர் நாடு பெயர்ச்சி, யாருடைய குற்றம்? – கி.சீலதாஸ்

இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, பெற்றோர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, சாதாரணக் கல்வியைப் பயின்ற பின்னர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது இயல்பு. சாதாரணமான தொழிலுக்கு அப்பாற்பட்ட மருத்துவம், சட்டம், கணக்கர், பொறியியல் துறை போன்றவற்றைத் திறத் தொழில் என்பார்கள்.

இத்தகைய உயர்கல்வியைப் பெற்றவர்கள், தாங்கள் கற்றதை இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என்று கருதுவதில், எதிர்பார்ப்பதில் குறை காண முடியாது. ஒருவர் மேற்சொல்லப்பட்ட திறத் தொழில் தகுதியைப் பெறும் வரை நாடு அவர் மீது முதலீடு செய்கிறது என்பதை மறுக்க இயலாது. இதற்குச் சான்று, ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்நிலை கல்வி வரை நாடு இனாமாக வழங்குகிறது.

இக்காலகட்டத்தில் பல்கலைக்கழகப் படிப்பு பெறுவதற்குத் துணையாக இருக்கிறது கல்விக்கான வட்டியில்லாக் கடன். அரசமைப்புச் சட்டத்தின் பன்னிரண்டாம் உறுப்பு மலேசியக் குடிமகனுக்குக் கல்வியை உறுதிப்படுத்துகிறது.

இந்த நாட்டில் திறக் கல்வி பெற்றவர்கள் இந்த நாட்டிலேயே தங்களின் திறமையைப் பயன்படுத்தாமல் வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவதாகக் குறைபடுவது இன்று, நேற்று ஆரம்பிக்கவில்லை. இந்தக் குறை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. ஆகவே, இந்தக் குறைக்கான காரணத்தை ஆய்ந்துப் பார்க்கும் துணிவு அரசுக்கு இருந்ததா என்பதே கேள்வி.

திறக் கல்வி பெற்றோர் பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வதற்கான காரணம் என்ன? மூளைத் திறன் கொண்டோர் எளிதில் நாடு பெயர்ச்சி செய்கிறார்கள் என்று காலங்காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. இது புதிய நிலையா? கிடையாது! இதைப் பொருட்படுத்தாதவர்கள்தான் அதிகாரத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, இந்த நிலை நீடித்தது.

திறக் கல்வி பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொதுவாக கருதுவது தவறு என்பதை உணர வேண்டும். பணிபுரியும் இடத்தில் திருப்தியற்ற நிலை, பொதுவாகவே ஒருவரின் திறனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அணுகுமுறை யாவும் தான் திறக் கல்வியாரை வேறு நாடுகள் ஈர்க்கின்றன.

திறத் தொழிலாளர்களை மட்டும்தான் பிற நாடுகள் கவர்கின்றனவா? சாதாரண தொழிலாளர்களைக் கூட வெளிநாடுகள் கவர்வதாக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இருவகையினரிடையே எது முக்கியமாகக் கவர்கிறது? மலேசியாவில் கிடைக்கும் ஊதியத்தை விட பன்மடங்கு அதிகம், கவர்ச்சியான ஊதியம் என்பதை மறுக்க முடியாதே!

மருத்துவர் ஒருவர் வேறு நாட்டுக்குச் செல்ல தயாராகிவிட்டார் என்றால் அதற்கு அடிப்படை காரணம் இந்த நாட்டில் கிடைக்கும் ஊதியமாக இருக்கலாம். இதுவே முக்கியக் காரணம் என்று சொல்ல முடியாது.

ஏனெனில், மருத்துவத்துறையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் உள்ளவர்கள் இந்நாட்டிலேயே சிறப்பாகத் தொழில் செய்கிறார்கள், நல்ல நிலையில் இருப்பதும் கண்கூடு. இந்த நிலையைத் தனியார் துறையில் காணலாம். தங்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை அரசு துறையில் பணிபுரிவோருக்குக் கிடைக்குமா?

வழங்கப்படுமா என்பதே முக்கியமான கேள்வி. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் அரசு துறையில் திறத் தொழிலாளர்கள் தங்களின் திறமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில் பணிபுரிவதைச் சங்கடமான ஒரு நிலையாகக் கருதுகின்றனர்.

இதில் நியாயம் இருக்கிறது. இது ஒரு புறமிருக்க, திறத் தொழிலில் பலர் இந்நாட்டில் எதிர்காலம் கிடையாது அல்லது எதிர்காலம் சூனியமாக இருக்கிறது என்ற காரணத்தை முன்வைப்பதும் ஒன்றும் விசித்திரமல்ல.

இந்த நாட்டில் பொது வாழ்வில் புகழ்பெற்றவர் ஒருவர் வேறொரு நாட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பவர் என்ற தகுதியைப் பெற்றிருந்தார். அவர் போலவே இன்னொருவர் என்னிடமும் “வேறு நாட்டில் குடியேற ஏதாவது செய்து வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். “அப்படி ஒரு எண்ணம் இல்லை!” என்றேன். அதற்கு அவர், “தற்காப்புக்காக ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்வது நல்லது” என்றார். இப்படிப்பட்ட மனநிலை எதைக் குறிக்கிறது?

இந்த நாட்டின் மீது நம்பிக்கையற்ற மனநிலையை வெளிப்படுத்துகிறது எனின் அது தவறான கருத்தல்ல. இப்படிப்பட்ட மனநிலை எண்பதுகளில் முளைத்தது.

இப்பொழுது பெரும்பாலும் மருத்துவர்களைத்தான் குறிவைத்து பேசப்படுகிறது. இது உண்மையான நிலவரத்தை உணராத போக்காகும். தாதிகள் கூட வெளிநாட்டில் வாய்ப்பைத் தேடுகிறார்கள்.

மலேசிய தாதிகள் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். சிங்கப்பூர் தாதிகள் பிரிட்டனுக்குப் போகிறார்கள். மத்தியக் கிழக்கு நாடுகளில் நல்ல ஊதியம் கிடைக்கிறது என்பதால் அங்கும் நம் தாதிகள் செல்ல தயங்குவதில்லை. இதன்றி, சாதாரண தொழிலாளர்கள் கூட வெளிநாடுகளில் வேலை தேடுகிறார்கள்.

அவர்களின் குறி சிங்கப்பூர். அங்கே நல்ல ஊதியம் என்பதால் மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இலக்கு சிங்கப்பூர் ஆகும்.

நல்ல பயிற்சி, அனுபவம் கொண்ட மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வானேன்? பணம் மட்டும் குறிக்கோள் என்றால் அரசு துறையிலிருந்து விடுபட்டு தனியார் மருத்துவத்துறையில் திருப்தி காணும் பல மருத்துவ நிபுணர்களைக் காண்கிறோம்.

மருத்துவத்துறையில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் நண்பருடன் இது பற்றிப் பேசும்போது, “பணம் மட்டும் குறியல்ல! வேலையிடத்துச் சூழல், மருத்துவ வழிமுறைகள் யாவும் ஒரு நோயாளியைக் குணப்படுத்த உதவும் தரங்களாகும். இந்தத் தரங்கள் யாவும் பாழடைந்த நிலையைத்தான் காண்கிறோம்.

உதாரணத்துக்கு, ஒரு நோயாளியைக் குணப்படுத்த நாள் பிடிக்கும். குறைந்தது மாதத்தில் நான்கு முறையாவது கண்காணிக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

மருத்துவர்கள் குறைவு, மற்ற வசதிகளும் குறைவு. எனவே, மாதத்திற்கு நான்கு முறை சிகிச்சை என்பது மாறி மாதத்திற்கு ஒரு முறை என்றாகிவிடுகிறது. நோயாளி யார் மீது குறைபடுவார்? மருத்துவர் மீது தானே! இந்தப் பழிக்கு மருத்துவர்களை உட்படுத்தலாமா? இதைத் தவிர்க்கும் பொறுப்பு மருத்துவத்துறைக்கு உண்டு. ஆனால், கவனிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் மருத்துவர்கள் தங்களின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது குற்றமாகாது.

ஒரு சிலர் அரசு மருத்துவத்துறையிலிருந்து விலகி தனியார் மருத்துவ நிறுவனங்களில் சேவையை நல்குகின்றனர். நிம்மதியான வாழ்க்கை, பழிச்சொல்லுக்கு ஆளாகாத நிலை, தங்களின் தொழிலை, சிறப்பு மருத்துவத்திறனை நன்கே வழங்க முடிகிறது என்ற திருப்தி அவர்களை ஆட்கொள்கிறது.

எனவே, மருத்துவர்கள் மட்டும் வெளிநாடுகளுக்குப் போக வேண்டும்  என்ற மோகத்தில் இருக்கவில்லை. தாதிகளும் மற்றும் ஏனையர் அதே மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும். உணர்ந்து செயல்பட வேண்டும்.

மருத்துவத்துறையில் மட்டுமல்ல வேறு பல சேவை துறைகளில் மலேசியர்கள் கவலையோடு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும். திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்பது முதுமொழி. திரவியம் தேடிய பிறகு நாடு திரும்பிவிடுவார்கள்.

ஆனால், இங்கே அப்படியல்ல. திரவியம் கிடைக்கும் இடத்திலேயே தங்கிவிட வேண்டும் என்ற மனநிலை மேலோங்கி காணப்படுவது நாட்டுக்கு நல்லது அல்ல.

சிறுபான்மையினர் மட்டும்தான் ஒரு போலி நிலைப்பாட்டை வளர்க்கின்றனர் என்பது அபத்தமான எண்ணம், முடிவு எனலாம். காரணம், பெரும்பான்மையினரில் பலர் கூட இந்த நாட்டின் மருத்துவத்துறை அமைப்பில் சோடை இருப்பதை உணர்ந்து, திருத்த முடியாத நிலையை அடைந்துவிட்டதால் விரக்தியுடன் புழுங்கி வெளிநாடு சென்றுவிட்டதை மறக்கக்கூடாது.

எனவே, இது இனப் பிரச்சினை அல்ல. நாட்டுப் பற்று பிரச்சினை. அதை உணராதவர்களின் மனநிலைதான் கவலைக்குரியதாக இருக்கிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும்.

நூதன மருத்துவ வசதிகளுக்கு அரசு முயற்சிப்பதோடு ஊதிய உயர்வையும் மனத்தில் கொள்வது முக்கியமாகும். எல்லோருடைய திறனையும் அங்கீகரிக்க வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் மலேசியாவை விட்டு யார் போவார்?