இராகவன் கருப்பையா – இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கு ரமேஷ் ராவ் எனும் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் மவுனம் கலைய வேண்டும். நமது சிக்கல்களை களைய வழிமுறைகள் என்ன ?
இதன் தொடர்பாக பல நிலைகளிலும் உள்ள நம் சமூகத்தினர் கொந்தளிப்பு அடைந்துள்ள போதிலும் பெரும்பாலான நம் தலைவர்கள் அலட்சியமாக இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
நம் நாட்டில் பி40 தரப்பில் உள்ள இந்தியர்களும் ஓராங் அஸ்லி எனப்படும பழங்குடி மக்களும்தான் மிகுந்த ஏழ்மையான நிலையில் உள்ளனர் என பிரதமர் அன்வார் தேர்தலுக்கு முன் மட்டுமின்றி அதற்குப் பிறகும் பகிரங்கமாகவே அறிவிப்புகளை செய்திருந்தார்.
இந்தத் தரப்பினரின் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தது நமக்கெல்லாம் உற்சாகத்தை அளித்திருந்ததும் உண்மைதான்.
ஆனால் அரசாங்கம் அமைந்து தற்போது கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்ட நிலையில் இதன் தொடர்பாக ஒரு மேம்பாட்டையும் காணவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரமேஷ் ராவின் என்பவரின் நியமனத்தில் எந்த ஒரு தெளிவும் இல்லாததால் நம் சமூகம் பெரும் குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அவரோடு எப்படித் தொடர்பு கொள்வது, எப்படிப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள முடியும், போன்ற விவரங்கள் வெகுசன மக்களுக்குத் தெரியவில்லை. அல்லது அவருக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
இந்தக் குழப்பத்தைக் கலைய அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரையில் யாரும் முன் வராத நிலையில் பினேங் மாநில துணை முதல்வர் ராமசாமியும் பேராக், சுங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவனேசனும் மட்டுமே கருத்துரைத்துள்ளனர்.
அன்வார் மட்டுமின்றி மனிதவள அமைச்சர் சிவகுமார் உள்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு யாரும் இதுவரையில் வாயைத் திறக்காமல் இருப்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
சமுதாய நலன் மீது எவ்வகையிலும் சம்பந்தமே இல்லாத ரமேஷ் ராவ் ‘நியமனம்’ என்ற ஒன்றை பெற்றுள்ளதை விட நம் தலைவர்கள் மவுனமாக இருப்பதுதான் மக்களுக்குத் தற்போது பெரும கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குழப்பத்திற்கு எல்லாம் வித்திட்ட அஹ்மட் ஸாஹிட்டும் கூட ஒன்றும் நடக்காததைப் போல்தான் திரிகிறார்.
பி40 தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் இது குறித்தத் தெளிவான ஒரு விளக்கம் தேவை. எந்த குப்பனோ சுப்பனோ அவ்வளவு சுலபத்தில் அன்வாரிடமோ ஸாஹிட்டிடனோ பேசிவிட முடியாது என்பதும் நமக்குத் தெரியும்.
கடந்த பொதுத் தேர்தலில் கிட்டதட்ட 85 விழுக்காட்டு இந்தியர்கள் பக்கத்தானுக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குக் கிடைத்த சன்மானம் இந்த வெறும் ரமேஷ் ராவ்தானா, என நம் சமூகம் கொதிப்படைந்துள்ளதில் நியாயம் உள்ளது.
பொருளாதார அமைச்சர் ரஃபீஸி ரம்லி, தீபன் எனும் ஒருவரை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இதே போல்தான் ஸாஹிட் தனது சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவை நியமித்துள்ளாரா எனும் குழப்பம் நீடிக்கிறது.
சிறார் நலன்களைப் பாதுகாக்க சிறப்பு இலாகா ஒன்றை அமைக்க கொள்கை அளவில் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
கோறனி நச்சிலின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இப்படியாக, பல்வேறுத் தரப்பினரின் மேம்பாடு அரசாங்கத்தின் பார்வையில் இருக்கும் வேளையில் இந்தியர் நலன் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது? இதில் இந்தியத் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?
மலேசிய அரசியல் வரளாற்றில் முதல் முறையாக எதிரணியில் எந்த ஒரு இந்திய மக்கள் பிரதிநிதியும் இல்லை. இந்நிலைமை நமக்கு சாதகமா, பாதகமா? அதை சாதகமாக பயன்படுத்தும் தலைமைத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும்.