நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்குக் கோவிட் -19 சுகாதார சோதனைகளை அரசாங்கம் கடுமையாக்குகிறது

மற்ற நாடுகளில் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக உள்ளேநுழையும் பயணிகளின் சுகாதார சோதனைகளை நாடு கடுமையாக்கும் என்றும், மலேசியா அதைக் கடுமையாகச் செய்யும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்வார், இந்த நடவடிக்கை பாரபட்சமின்றி செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தினார்.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை கொடுக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

“இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் விவாதித்த பிரச்சினைகளில் ஒன்று, கோவிட் -19 ஐ நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் பற்றியது, குறிப்பாக வைரஸின் புதிய மாறுபாடுகள்குறித்த கவலைகள் காரணமாக என்றார்”.

சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புதிய கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றன, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் கண்டுபிடிக்கப்படுவது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்

‘நாங்கள் அவசர முடிவுகளை எடுப்பதில்லை’

இதைத் தொடர்ந்து, உள்வரும் பயணிகள், குறிப்பாகச் சீனாவிலிருந்து வருபவர்கள்மீது கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு சில தரப்பினர் புத்ராஜெயாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

எந்தவொரு நாட்டிலிருந்தும் வரும் பயணிகளை அரசாங்கம் குறிப்பாகக் குறிவைக்காது என்றும், அனைத்து பயணிகளுக்கும் கடுமையான சோதனைகள் நடத்தப்படும் என்றும் அன்வார் கூறினார்.

கடந்த ஆண்டு மலேசியா சீனாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பதிவு செய்துள்ளது, அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், ஆனால் எந்தவொரு குறிப்பிட்ட நாடுகளாலும் ஏற்படும் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையில் அரசாங்கம் அதிகரிப்புகளைக் காணவில்லை என்று அவர் கூறினார்.

“இப்போது, ​​​​நாங்கள் எந்த நாட்டிற்கும் எதிராகப் பாரபட்சம் காட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஏனென்றால், சீனாவில் மட்டும்மல்லாமல்  அமெரிக்காவிலும் கோவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம்”.

“எனவே, எங்கள் குடிமக்களைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, உள்ளே வரும் எவரும் கண்காணிக்கப்பட்டு அதே நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்”.

கொரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் அளவை எடுத்துக் கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் பதிவுகள் இதுவரை 49% மக்கள் மட்டுமே தங்கள் பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன, மேலும் நாட்டில் இப்போது ஆறு மில்லியன் தடுப்பூசி அளவுகள் உபரியாக உள்ளன என்று அவர் கூறினார்.