உங்கள் கருத்து: “இன்னொரு சிலாங்கூர் எம்பியான ஹருன் இட்ரிசுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நீதிமன்றம் தண்டனையைக் கூட்டும் என்று எதிர்பார்ப்போம்.”
கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை
வீரா: குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் கூடினபட்ச தண்டனை ஈராண்டுச் சிறையாகும். முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோவுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மேன்மை தங்கிய நீதிபதி தண்டனையில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்துள்ளார். வீட்டைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.
முன்பு,பத்து எம்பி தியான் சுவாவுக்கு ரிம2,000 அபராதம் விதிக்கப்பட்டது.அதனால் அவரது எம்பி பதவி தப்பியது. அதேபோல் ஓராண்டுச் சிறைத்தண்டனையால் கீர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட மாட்டார். சிறைத்தண்டனையில் ஒரு நாள் கூடியிருந்தால்கூட அவர் தகுதி இழப்பார். அதனால்தான் மனிதர் முகத்தில் அத்தனை சிரிப்பு.
கீர் தோயோ சிறை செல்வார் என்று நம்புவோர் சிலரே. பார்த்துக்கொண்டே இருங்கள்,அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற்றால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்து விடும். தங்களைப் பற்றிய இரகசியங்களைச் சொல்லி விடுவார் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும் அல்லவா?
அன்புப்பையன்: 12மாதச் சிறை என்பது குற்றச்செயல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் ஒரு தண்டனையாக தெரியவில்லை.இன்னொரு சிலாங்கூர் மந்திர் புசாரான ஹருன் இட்ரிசின் வழக்கில் அவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கும் ஆறாண்டு விதித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மேல்முறையீட்டில் தண்டனை கூட்டப்படும் என்று எதிர்பார்ப்போம்.
முதல் தடவையாக புரிந்த குற்றமாம். கேட்பதற்கு வேடிக்கையாக இல்லை. அவர் பதவியைத் தவறாக பயன்படுத்திக்கொண்டதுதான் ஊரறிந்த உண்மையாயிற்றே. அவற்றுள் டிஸ்னிலாந்துக்கு மேற்கொண்ட ‘ lawatan sambil belajar (கல்விச் சுற்றுலா)’வும் ஒன்று.
அஸ்லான்: அம்னோ பெரும்புள்ளி ஒருவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால் அவருக்குத் தண்டனை கிடைக்காமல் காப்பாற்ற வேண்டும், அப்படியே தண்டிக்கப்பட்டாலும் மிகக் குறைந்த தண்டனை கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால்தான் தொடக்கத்திலேயே எதிர்த்தரப்பு, அரசுத்தரப்புடன் கலந்து பேசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)ச் சட்டப்படி அல்லாமல் குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படுவதற்கு ஏற்பாடு செய்தது.எம்ஏசிசி சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் இயல்பாகவே ஈராண்டுச் சிறை கிடைத்திருக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாமலும் போயிருக்கும்.
பார்த்தீர்களா, எல்லாரையும் திருப்திப்படுத்த எப்படிப்பட்ட திருகுதாளம் நடந்திருக்கிறது. கீர், அவருடைய சட்டமன்ற இடத்தை இழக்கப்போவதில்லை;அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழக்கப்போவதில்லை.
கலா: நன்றாகத்தான் ஆய்வு செய்திருக்கிறீர்கள், அஸ்லான். இவ்வழக்கின் மூலமாக, மூன்றாம் உலகில் சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை மலேசியா உலகுக்கு எடுத்தியம்பியுள்ளதாக சொல்லலாமா? இங்கு, ஆள்வோருக்கு ஒரு சட்டம், சாமான்யர்களுக்கு ஒரு சட்டம்.
பீரங்கி: முன்னாள் சிலாங்கூர் எம்பி ஹருன் இட்ரிஸ் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்தவர் உசேன் ஒன். பின்னர், அவர் அரச மன்னிப்பு பெற்று வெளிவந்தார்-மகாதிரின் தயவால்.
அதே மகாதிரின் ஆட்சியிதான் இன்னொரு அரசியல்வாதியான அன்வார் இப்ராகிம்மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதுதான் ஐயா பிஎன் அரசியல்.
ஷானோண்டோவா: குற்றச்செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் தண்டனை அல்ல இது. மிகவும் எளிய தண்டனை.
ஊழலைப் பொறுப்பதற்கில்லை என்பதைத் தெளிவாக உணர்த்த மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையைக் கூட்ட வேண்டும்.
மாற்றம் விரும்பி: சட்டத்தில் ஏதோ குறைபாடு தெரிகிறது. ஓராண்டுச் சிறை என்பது கடையில் சிகரெட் பாக்கெட் திருடிய ஒருவனுக்கு விதிக்கப்படும் தண்டனை போல் அல்லவா இருக்கிறது. இது குற்றத்தைத் தடுக்காது ஊக்குவிக்கும்.