பஹாங்கில் மற்றுமொரு பூர்வக்குடி யானைக்குப் பலி

நேற்று காலை 10 மணியளவில், பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 6-ம் நாளன்று, விடியற்காலை 3 மணியளவில், பஹாங், சுங்கை கோயான், சிமோய் கிராமத்தில், வீட்டில் தனது கணவர் மற்றும் 7 குழந்தைகளுடன் உறக்கத்தில் இருந்த வாக் எனும் செமாய் இனப் பூர்வக்குடி பெண்மணி, காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே மாண்டது குறிப்பிடத்தக்கது.

காலை 8 மணிமுதல் இம்மூவரும் காட்டில் பெத்தாய்-யைத் தேடி அலைந்ததாகவும், சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, திடீரென காட்டு யானை ஒன்று புதரிலிருந்து ஆவேசமாக தோன்றி அவர்கள் திசை நோக்கி வருவதைக் கவனித்ததாகவும் இறந்தவரின் சகோதரரான போர்ஹான் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்தவர்கள் ஒளிந்து கொள்ள ஆளுக்கு ஒரு திசை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

“நான் மலைப் பகுதியை நோக்கி ஓடினேன். அந்த நேரத்தில் ஆண்டி கீழே விழுந்ததை நான் பார்த்தேன். யானை என் சகோதரனைப் பந்தைப் போல் உதைப்பதை எங்களின் நண்பனான அபின் பார்த்தான்.

“பின் அந்த விலங்கு ஆண்டியின் இறந்த உடலை உலர்ந்த இலைகளால் மூடிவிட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் உடல் அருகே அமர்ந்திருந்தது. பிறகு, மெதுவாக நகர்ந்து, அங்கிருந்து வெளியேறியது,” என போர்ஹான் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை (JAKOA) சந்தித்தபோது கூறியுள்ளார்.

தன்னைக் காப்பாற்றிகொள்ள ஒரு மரத்தில் ஏறிய அவரது நண்பர் அபின், நடந்த அனைத்தையும் பார்த்ததாகத் தெளிவுபடுத்திய போர்ஹான், யானை அங்கிருந்து சென்ற பிறகு, தானும் அபினும் தனது சகோதரனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

பகாங், லிப்பிஸ் மாவட்டக் காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் அஸ்லி முகமது நூர் இதுகுறித்து கூறுகையில், தொடக்கத்தில் யானை கம்போங் ரெகாங்கில் நுழைந்தது என்றும், கிராமத்து மக்கள் விரட்டியதில் அது டுரியான் பழத்தோட்டப் பகுதிக்குள் நுழைந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

யானையின் இந்தத் திடீர் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்திருக்கும் பூர்வக்குடி கிராம மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதும், இம்மாதிரியான தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் மாநில அரசு, மத்திய அரசு, வனத்துறை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

அதே கடமை யானைகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதுவரை கிராமத்திற்குள் நுழையாத காட்டு யானைகள் இப்போது நுழைய தொடங்கியிருக்கிறது என்றால் காடு அழிப்பு ஒன்று மட்டுமே அதன் காரணமாக இருக்க முடியாது.

யானை இதுவரை வாழ்ந்த இடத்தில் அதன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஏதாவது ஒரு சக்தி உள்ளே நுழைந்திருக்கலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அதனால் ஏற்படும் கோபமும் யானைகள் மனிதர்களைத் தாக்க காரணமாக இருக்கலாம். இவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

காட்டிற்குள் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயங்களோடு, சட்டத்திற்கு விரோதமாக ஏதும் நடக்கிறதா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. யானை ஆய்வாளர்களுடன் இணைந்து, இதுக்குறித்து கலந்தாலோசிப்பது நல்ல தெளிவினைக் கொடுக்கும்.

மனிதர்களும் மிருகங்களும் இந்தப் பூமியின் வாழ்வுக்குத் தவிர்க்க முடியாத உயிரிகள். மிருகங்களின் வாழ்விடத்தைப் பிடுங்கிக்கொள்ளும் சுயநலமான மனிதர்கள், அதனால் உண்டாகும் பாதிப்பை வனம் சார்ந்த மக்களின் தலையிலேயே போட்டுவிட்டு, யானையைக் கூண்டில் அடைக்க வேண்டும் என்று நியாயம் பேசிக்கொண்டிருப்பது என்ன ஒரு நீதி என்று புரியவில்லை.

மேலே உள்ளச் செய்தியில், இறந்த உடலை, காட்டு யானை உலர்ந்த இலைகளால் மூடியதாகவும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆண்டியின் உடல் அருகே அமர்ந்திருந்து, பின்னர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது யானைகளுக்கே உள்ள பிறவி குணமாகும். தமிழ்நாட்டில் யானைகள் இவ்வாறு நடந்துக்கொள்வதைத் தோழர் கோவை சதாசிவம் “ஆதியில் யானைகள் இருந்தன” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யானையின் இந்தக் குணத்தை அறிவியல் ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. இம்மாதிரியான ஆய்வுகளும் கலந்துரையாடல்களுமே மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான போரை நிறுத்துவதற்குத் துணை புரியும்.

சமீபத்திய ஆய்வு ஒன்று, 1970-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, மொத்த வனவிலங்குகளில் 69 விழுக்காடு அழிந்துவிட்டதாகச் சொல்கிறது. விலங்குகள் அழிந்தால் மனிதனும் சேர்ந்தே அழிவான் என்பது இயற்கையின் விதியாகும்.

  • யோகி