அரசு கொள்கையைக் குறைகூறியதற்காக ஹசான் அலி மன்னிப்பு கேட்டார்

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி, கட்சியின் சமூகநலக் கொள்கையைக் குறைகூறியதற்கு மன்னிப்புக் கேட்டதுடன் அவ்விவகாரம் தொடர்பில் தாம் கூறியதையெல்லாம் மீட்டுக்கொண்டிருக்கிறார்.

“பாஸ் உறுப்பினர் மற்றும் மத்திய செயல்குழு உறுப்பினர் என்ற முறையில், அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தபோது எல்லைமீறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

“சமூகநல அரசு தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். வரம்புமீறி நடந்து கொண்டதற்காக தலைமையிடம் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றாரவர்.

ஹசான், இதற்குமுன்பு பாஸில் உள்ள உலாமா-அல்லாதாரைச் சாடியதுடன் கட்சி இஸ்லாமியப் போராட்டத்தைவிட்டு விலகிச் செல்வதாகவும் குறைகூறியிருந்தார். 

உதாரணத்திற்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில், உலாமா-அல்லாதார் “விட்டுக்கொடுக்கும் அரசியல் பக்கம் அதிகம் சாய்வதாகவும்” அதன் பொருட்டு “கட்சியின் கோட்பாடுகள் பலியிடப்படுகின்றன” என்றும் கூறினார்.

இதனால் கட்சி “இஸ்லாமிய அரசு” என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்று “ஒற்றுமை அரசு” “சமூகநல அரசு” என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளது என்றாரவர்.

“என்னைக் கேட்டால் சமூகநல அரசு பாஸுக்குத் தேவையில்லை என்பேன். சுவீடன், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் அது கொண்டுவரப்பட்டுள்ளது. சமயச் சார்பற்றவர்கள்(தலைவர்கள்) அதைச் செய்யட்டும்”, என்று ஹசான் கூறியிருந்தார்.

TAGS: