ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த ம.இ.கா.: அம்னோ தலைவர் அம்பலப்படுத்தினார்!

இராகவன் கருப்பையா –கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து யார் ஆட்சி அமைப்பது எனும் இழுபறி நிலவிய போது ம.இ.கா. அரங்கேற்றிய துரோகச் செயல் இப்போது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

இன வெறியையும் மதவாதத்தையும் பறைசாற்றும் பெர்சத்து, பாஸ் கூட்டணிக்கு ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ஆதரவளித்தன என அந்த சமயத்தில் அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் தற்போது அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

தலைநகரில் நடைபெற்ற அம்னோ கூட்டமொன்றில் பேசிய துணைப் பிரதமருமான அஹ்மட் ஸாஹிட் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றின் துரோகச் செயலை பட்டவர்த்தனமாக தோலுறித்து அம்பலப்படுத்தினார்.

நாட்டின் 222 தொகுதிகளில் எந்த ஒரு தொகுதியிலும் இந்தியர்களின் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் காலங்காலமாக அம்னோவின் ஆதரவில்தான் அங்கும் இங்குமாக ஓரிருத் தொகுதிகளில் ம.இ.கா. வெற்றி பெற்று வந்துள்ளது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.

அக்கட்சியை நம்பிதான் ஆண்டாண்டு காலமாக ம.இ.கா.வினர் வயிறு வளர்த்து வந்தது மறுக்க முடியாத உண்மை.

இப்படிப்பட்ட சூழலில் ‘ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தக் கதை’யாக திரை மறைவில் நடந்த சூழ்சிக்கு சோரம் போன ம.இ.கா.வின் செயல் அக்கட்சியின் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்று என கருதப்படுகிறது.

மிதவாதத்தைக் கடைபிடிக்கும் பக்காத்தான, அம்னோ கூட்டணியை புறக்கணித்து ஒரு தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து செயல்பட முனைந்த ம.இ.காவின் போக்கு இந்நாட்டு இந்தியர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் ஒன்றாகும்.

‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்வதைப் போலான இச்செயலினால் அக்கட்சியினர் ‘தங்கள் தலைகளில் சொந்தமாகவே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட’தைப் போலாகும்.

பாரிசானில் அது தொடர்ந்து இருக்குமேயானால் மலாய்க்காரர்கள், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு முழைமையாகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ஏற்கெனவே பெருவாரியான இந்தியர்களின் ஆதரவை இழந்துவிட்ட ம.இ.கா.வுக்கு இச்சூழல் மேலும் ஒரு படி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் பட்டக் காயங்களில் இருந்து மீட்சி பெற முடியாமல் அம்னோவே தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அம்னோவுக்கு இப்படி துரோகமிழைத்துவிட்டு பிறகு அமைச்சரவை அமைக்கப்பட்ட சமயத்தில் ‘பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வோம்’ என அவர்கள் செய்த அறிவிப்பு வேடிக்கையான ஒன்றுதான்.

பாஸ், பெர்சத்து கூட்டணியில் இணைந்தால் ஒரே இந்தியப் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும் எனும் சுயநல வேட்கையில் ம.இ.கா. அந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

அதே வேளை பக்காத்தான் தலைமையில் அமைந்த கூட்டாட்சியின் கீழ் பி.கே.ஆர். கட்சியிலும் ஜ.செ.க.விலும் திறமையும் தகுதியுமுடைய ஏராளமான  இந்தியப் பிரதிநிதிகள் இருப்பதால் அமைச்சர் பதவி என்பது வெறும் ‘எட்டாக் கனி’ என்பதை அநேகமாக அவர்களே உணர்ந்திருப்பார்கள்.

முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் தலைமையில் அரங்கேறிய அந்த மாபெரும் சதித்திட்டத்தில் அவரோடு மேலும் 6 அம்னோ பிரதிநிதிகள், ம.சீ.ச.வைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ம.இ.கா.வின் சரவணன் ஆகியோரின அடையாளங்களை அஹ்மட் ஸாஹிட் அம்பலப்படுத்தினார்.