பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று காலைக் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள விஸ்மா MCAவில் நடந்த MCA’வின் சீன புத்தாண்டு திறந்த இல்லத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர், இந்த நல்ல நாளுக்கு MCA ஆல் அழைக்கப்பட்டதற்கும், பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“என்னையும் (என் மனைவி) அசிசாவையும் (Wan Azizah Wan Ismail) அழைத்ததற்காக, குறிப்பாக எம்.சி.ஏ தலைவர் வீ கா சியோங்கிற்கு(Wee Ka Siong) நன்றி சொல்ல விரும்புகிறேன்”.
“25 ஆண்டுகளுக்குப் பிறகு எம்சிஏ கட்டிடத்தில் நான் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இன்று நான் பல பழைய நண்பர்களைச் சந்தித்ததால் மகிழ்ச்சி அடைகிறேன், அவர்களுக்குச் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்,” என்று அன்வர் கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசன், பிகேஆர் தகவல் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் தியோங் கிங் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, அன்வார் அப்போதைய டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான BN நிர்வாகத்தின் கீழ் துணைப் பிரதமராக இருந்தார், இது அவரை MCAவின் நெருங்கிய கூட்டாளியாக ஆக்கியது.
1998 ஆம் ஆண்டில் அம்னோ மற்றும் BN இல் இருந்து மகாதீர் அன்வாரை வெளியேற்றியபோது, அவர் இப்போது பி.கே.ஆர் என்று அழைக்கப்படும் ஒரு புதிய கட்சியை உருவாக்கியபோது இந்த உறவு முறிந்தது.
அன்றிலிருந்து, சமீபத்திய 15வது பொதுத் தேர்தல்வரை அன்வார் BN இன் மிகப்பெரிய அரசியல் எதிரிகளில் ஒருவராக இருந்தார், அதன் பின்னர் ஹராப்பானும் BN னும் இணைந்து ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தனர்.
பல தசாப்தங்களாக நீடித்த இந்த மோதல் புதிய ஒத்துழைப்போடு முடிவுக்குவரப்பட்டது, இறுதியாக அன்வார் அதன் சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு MCA ஆல் மீண்டும் அழைக்கப்பட்டார்.