ஹாடி: சீன சமூகம் என் வாழ்க்கையின் ஒரு பகுதி

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிறுவயது முதல் இதுவரை சீன சமூகம் தனது வாழ்க்கையில் எப்படி மிகவும் நெருக்கமாக இருந்தது என்று கூறினார்.

குடும்ப உறவுகள் உட்பட சீன சமூகத்துடனான தனது தொடர்பை அவர் முகநூலில் விவரித்தார்.

“சீன சமூகம் என் வாழ்க்கையில் அந்நியமானது அல்ல. என் தாத்தா சீன சமூகத்திலிருந்து பல குழந்தைகளைத் தத்தெடுத்தார், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ. அவர்கள் என் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டார்கள்”.

“இரண்டாம் உலகப் போரின்போது, சீனாவிலிருந்து பல அகதிகள் கிழக்கு கடற்கரைக்கு வந்தனர். என் தாத்தா ஒரு முஸ்லிமல்லாத சீன அகதிக்கு அடைக்கலம் கொடுத்து, அந்த நபரை அப்போதைய கிராமத் தலைவராக இருந்த அவர்  தனது தோட்டத்தில் ஒளித்து வைத்தார்”.

“தற்செயலாக, எனது சொந்த மருமகன் ஒருவர் சீன இனத்தைச் சேர்ந்தவர், சீன சமூகத்துடனான எங்கள் குடும்பத்தின் உறவு புதிய விஷயம் அல்ல,” என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

நேற்று கோலாலம்பூரில் பெரிக்காத்தான் நேசனல் மற்றும் கெராக்கான் தலைவர்களுடன் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, ஹாடி தனது மகன் மற்றும் மருமகனுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்க திரங்கானுவின் கம்போங் ருசிலாவுக்கு விரைந்ததாகக் கூறினார்.

தனது சமூக ஊடக கணக்குமூலம், அப்துல் ஹாடி தனது குடும்பத்துடன் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பண்டிகையைக் கொண்டாடும் சில படங்களையும் பகிர்ந்துள்ளார்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், நாட்டில் உள்ள பல இனக் குழுக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு தளமாக இருக்க முடியும் என்று மராங் எம்.பி அறிவுறுத்தினார்.