ஒருங்கிணைந்து செயல்படும்  தலைவர்களை ஏற்றுக்கொள்ள PN தயாராக உள்ளது – பாஸ் வீப்

பெரிக்காத்தான் நேசனல் (PN) மற்றும் அதன் அங்கமான பாஸ் ஆகியவை எந்தவொரு அரசியல் தலைவரையும் அல்லது தனிநபரையும் தங்கள் அணியில் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளன.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்டால் கூட்டணி அவரை PN  அல்லது பாஸ் கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரின்(Ahmad Samsuri Mokhtar) பதில் இதுவாகும்.

கோலா திரங்கானுவில் இன்று நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியின் எதிர்காலம் கருத்தரங்கு 2.0 இல் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரங்கானு மந்திரி பெசார் (மேலே) “PN தலைமை எப்போதும் ரக்யாட்டுக்கு ஒத்த நிகழ்ச்சி நிரலைப் பகிர்ந்து கொள்ளும் எந்தவொரு அரசியல் தலைவரையும் அல்லது தனிநபரையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது,” என்று கூறினார்.

அஹ்மத் சம்சூரியின் கூற்றுப்படி, இந்த விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்பு PN “சமீபத்திய முன்னேற்றங்களை” கண்காணித்து வருகிறது.

கைரி அம்னோவிலிருந்து நீக்கப்பட்டால் அவர் பிஎன் அல்லது பாஸ் கட்சியில் சேர முடியுமா என்று மேலும் வலியுறுத்திய அஹ்மத் சம்சூரி, கூட்டணியும் கட்சியும் திறமையான தலைவர்களைக் கொண்டிருக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

அம்னோ தனது உச்ச மன்றக் கூட்டத்தை நாளை மாலை நடத்தவுள்ளது. உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் கைரியின் தலைவிதி அடங்கும் என்று பேசப்படுகிறது.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை கடுமையாக விமர்சிப்பதைத் தவிர, கட்சியின் முதல் இரண்டு பதவிகளுக்கான போட்டி இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதற்காகக் கடந்த அம்னோ பொதுச்சபையின்போது “இறக்குமதி செய்யப்பட்ட பிரதிநிதிகள்” கொண்டுவரப்பட்டதாகவும் கைரி கூறியிருந்தார்.