அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கட்சிக்குள் இருக்கும் எதிரிகளை ஒழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
மாறுபட்ட கருத்துகளை ஏற்க முடியும் என்றாலும், அம்னோவின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குபவர்கள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்.
அம்னோ கட்சிக்குள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், கட்சியை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் என்ற வகையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும். சதையில் முட்கள் இருக்க முடியாது, என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் ஜாஹிட்.
முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் மற்றும் முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரது கருத்து வெளியாகியுள்ளது.
முன்னாள் துணைத்தலைவர் ஹிஷாமுடின் உசேன் மற்றும் முன்னாள் தகவல் தலைவர் ஷஹரில் ஹம்சான் ஆகியோர் 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் மேல் கட்சி ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று அவர்கள் கூறினர்.
கூட்டணி அரசாங்கத்தில் துணைப் பிரதமராகவும் இருக்கும் ஜாஹிட், நிர்வாகத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க பாதுகாப்பு வலையம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
-FMT