பெர்சத்துவின் நற்பெயரை ‘சிதைக்க’ அரசாங்கம் MACCயைப் பயன்படுத்துகிறது  – ஹம்சா ஜைனுடின்

பெர்சத்துவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின்(Hamzah Zainudin) தற்போதைய நிர்வாகம் கட்சியின் நம்பகத்தன்மையையும் பெரிக்கத்தான் நேசனலின் நம்பகத்தன்மையையும்  “சிதைக்க”  அரசாங்க நிறுவனத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹம்சா இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள்குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதோடு, அதன் பலவீனம், தோல்வி மற்றும் சுயநலத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான தற்போதைய நிர்வாகத்தின் “கீழ்த்தரமான” மூலோபாயத்தை மக்கள் அறிவார்கள் என்று கூறினார்.

“கட்சிமீது வீசப்பட்ட அவதூறுக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக, எம்ஏசிசி எடுத்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணத்தைப் பெர்சத்துவால் உணர முடியும்”.

“கட்சிமீதான தீங்கிழைக்கும் அவதூறுகளை உடனடியாக நிறுத்துவதற்கு பெர்சத்து விசாரணைக்குத் தொடர்ந்து ஒத்துழைக்கும்,” என்று அவர் கூறினார், கட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

MACC தலைமை ஆணையர் அசாம்பாக்கி(Azam Baki) முன்பு, பணமோசடி தடுப்பு, மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்கு உதவ பெர்சத்துவின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையில் கட்சி தனது 2020 மற்றும் 2021 கணக்குகளை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இந்த முடக்கம், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொற்றுநோய் ஊக்க நிதியில் ரிம 92.5 பில்லியன் அரசு நிதிகள்மீதான MACC இன் விசாரணையுடன் தொடர்புடையது என்று நம்பப்பட்டது.

எவ்வாறாயினும், பெயர் குறிப்பிட விரும்பாத  MACC வட்டாரம், கட்சி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தபோது பல்வேறு திட்டங்களைப் பெற்ற சுமார் 10 ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெர்சத்து நன்கொடைகளைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாகக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறினார்.

ஆதாரத்தின்படி, மொத்த நன்கொடை ரிம 300 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு பெர்சது வங்கிக் கணக்குகளிலும் தற்போது 40 மில்லியன் ரிங்கிட் இருப்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.

ஜனவரி தொடக்கத்தில், MACC தனது விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியைத் தடுத்து வைத்தது.

2020 மற்றும் 2022 க்கு இடையில் பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பின் கீழ் அரசாங்க திட்டங்களை விநியோகிப்பதில் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு இடைத்தரகராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பின்னர் பெர்சத்து பிரிவு தலைவராக மாறினார்.

இந்தத் தொகையில் 4.5 பில்லியன் ரிங்கிட் 15வது பொதுத் தேர்தலுக்கான PN நிதியில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெர்சத்து அதிபர் முகைடின் யாசின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை மேலும் நிராகரிக்கும் வகையில் கட்சி நேற்று தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை வெளியிட்டது.