பத்துமலை நிர்வாகம்கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்  

இராகவன் கருப்பையா – நாடளாவிய நிலையில் தைப்பூசத் திருவிழா மிகவும விமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் சிலாங்கூர் பத்துமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக இல்லை என்றே தெரிகிறது.

கோறனி நச்சிலின் கடுமையான பாதிப்பினால் 2 ஆண்டுகளுக்கும் மேல் தைப்பூசத்திருவிழா முறையாகக் கொண்டாடப்படாத வேளையில் இவ்வாண்டு எல்லாமே கிட்டதட்ட வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

அதனாலோ என்னவோ, கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாகவே பத்துமலையில் தைப்பூசம் கலைக்கட்டத் தொடங்கிவிட்டது.

வார இறுதிகளில் மட்டுமின்றி இதர நாள்களிலும் கூட ஆயிரக் கணக்கானோர் பால் குடங்களையும் காவடிகளையும் எடுத்துத் தங்களது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயல்பாகவே குப்பைக் கூழங்களும் அங்கு பெருமளவில் அதிகரித்துள்ளன. பொறுப்பற்ற சிலரால் கண்டகண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படுகிற போதிலும் அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் நிலைமை மோசமாகியுள்ளது.

இதற்கிடையே அங்குள்ள பெண்களுக்கான கழிவறைகளில் தாழ்பாள்கள் உடைந்து கிடப்பதால் அவற்றை பயன்படுத்த இயலவில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.

பழுதடைந்த நிலையில் உள்ள அந்தக் கதவுகளின் காணொளிகள் அதிக அளவில் பகிரப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆண்களுக்கான கழிவறைகள் சிறப்பாக உள்ளன என்றும் பெண்களின் கழிவறைகள் இன்னும் பழுது பார்க்கப்படவில்லை எனவும் விளக்கம் கூறப்பட்டதாகத் தெரிகிறது.தைப்பூசத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களே இருக்கும் இவ்வேளையில் அடிப்படை வசதிகளான கழிவறைகள் கூட இன்னும் தயார் நிலையில் இல்லாதது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கடந்த வார இறுதியில் அதிகமானப் பெண்கள் பத்துமலைக்கு வருகையளித்ததால் கழிவறைகள் பற்றாமல் போய்விட்டது என்று சாக்குப் போக்கு கூறப்பட்டதாகத் தெரிகிறது.

ஆண்டுதோறும் பத்துமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டின் கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்கு ஏற்றாற் போல் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளை அவர்களுக்கு முறையாக ஏற்படுத்திக் கொடுப்பது கோயில் நிர்வாகத்தின் கடப்பாடாகும்.