இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தான் அம்னோவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற ஊகங்களுக்கு மறுப்பு தெரிவித்து, அதை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.
“கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராகத் தான் இன்னும் சேவை செய்து வருகிறேன். நான் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இது உச்ச கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை”, என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல அம்னோ தலைவர்களை பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்த கவுன்சிலின் முடிவை கேள்விக்குட்படுத்திய பின்னர், தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் இவ்வாறு கூறினார்.
15வது பொதுத் தேர்தலின் போது கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக முன்னாள் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின் மற்றும் முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமர் ஆகியோர் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னாள் துணைத்தலைவர் ஹிஷாமுடின் உசேன் மற்றும் முன்னாள் தகவல் தலைவர் ஷஹரில் ஹம்தான் ஆகியோர் 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இஸ்மாயில் பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கங்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், அவை சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவில்லை என்று கூறினார்.
-FMT