உள்ளூர் மக்களுக்குப் பதிலாகப் புலம்பெயர்ந்தோரை நியமிக்கும் முதலாளிகள்மீது அரசு நடவடிக்கை – அமைச்சர்

உள்ளூர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த முதலாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம், உள்ளூர் தொழிலாளர்களை வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்டு மாற்றுவது அல்ல, மாறாக ஐந்து முக்கியமான துறைகளில் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும் என்று அவர் கூறினார்.

“உள்ளூர் தொழிலாளர்கள் தங்கள் வருமான ஆதாரத்தை இழக்கும் அளவுக்கு இது நடக்கிறது என்று அரசாங்கம் கண்டறிந்தால் எந்தக் காரணமும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று சிவகுமார் (மேலே) இன்று சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) 2023 தொழில்முறை சான்றிதழ் திட்டத்தின் பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கியபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உற்பத்தி, கட்டுமானம், பெருந்தோட்டங்கள், விவசாயம் மற்றும் சேவைகள் (உணவகங்கள்) போன்ற முக்கியமான துறைகளில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்பு கூறியுள்ளன.

ஜனவரி 10 அன்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை சிறப்புக் கூட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாகத் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதோடு கூடுதலாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தளர்த்துவதற்கும் ஒப்புக்கொண்டது.

இதற்கிடையில், இந்தோனேசியாவிலிருந்து வீட்டு உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு அதிகரிப்பது குறித்து அரசாங்கம் இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகச் சிவகுமார் கூறினார்.

“அரசாங்கம் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டுள்ளது, இந்தோனேசியாவிலிருந்து வீட்டு உதவியாளர்களை அழைத்து வரும் செயல்முறை மிக அதிக செலவுகளை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.

மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ, அடுத்த கூட்டு பணிக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம்குறித்து விவாதிக்க இந்தோனேசியா தயாராக இருப்பதாகச் சமீபத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.