முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஹராப்பானில் சேர ஆர்வம், ஜாஹிட் விடுவாரா?

பல முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஹரப்பான் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தது தொடர்பாகப் பக்காத்தான் ஹராப்பானுடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

ஹராப்பான் அம்னோவுடன் விவாதிக்கும் என்ற அறிக்கைகள்குறித்து கருத்து தெரிவித்தபோது “இதுவரை அது என்னிடம் கொண்டு வரப்படவில்லை,” என்று அவர் கூறினார்

இன்று புத்ராஜெயாவில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (Technical and Vocational Education and Training Council) கூட்டத்திற்கு தலைமை தாங்கியபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமரான ஜாஹிட் (மேலே) இதைக் கூறினார்.

நேற்று, ஹராப்பான் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராஹிம், கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்த முன்னாள் அம்னோ உறுப்பினர்களை ஹராப்பான் ஏற்குமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதுகுறித்து விரைவில் அம்னோ தலைவர்களுடன் விவாதிக்கப்படும் என்றார்.

கடந்த நவம்பரில் 15வது பொதுத் தேர்தலின்போது செய்த குற்றங்களுக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உட்பட 44 உறுப்பினர்களை ஜனவரி 27 அன்று அம்னோ பதவி நீக்கம் செய்தது.