போக்குவரத்து விதிமீறல் காரணமாகப் பகாங் துணை சபாநாயகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

கடந்த ஞாயிறன்று சமூக ஊடகங்களில் குற்றத்தின் படம் வைரலானதைத் தொடர்ந்து, பஹாங் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் லீ சின் சென்(Lee Chin Chen) போக்குவரத்து குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

பிலுட் சட்டமன்ற உறுப்பினரான லீ (மேலே), இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பெந்தோங் மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையிடம் தனது அறிக்கையை அளித்ததாகக் கூறினார்.

“நான் எனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன், சம்மன் அனுப்பப்பட்டது. எல்லா மலேசியர்களையும் போலவே, நானும் விரைவில் சம்மன் செலுத்துவேன்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

காவல்துறையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதையும் அவர் பாராட்டினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (Road Transport Act) 1987 இன் பிரிவு 79 (2) இன் கீழ் சம்மன் அனுப்பப்பட்டதாகப் பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் ஜைஹாம் முகமட் கஹார்(Supt Zaiham Mohd Kahar) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிறன்று, லீயின் வாகனத்தின் புகைப்படம் ஒரு முகநூலில் பதிவேற்றப்பட்டது, அங்கு அதன் உரிமையாளர் சாதாரண குடிமக்கள் அமலாக்க நடவடிக்கைக்கு உட்பட்டிருக்கும்போது ஒரு மக்கள் பிரதிநிதி சட்டத்தை மீற முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

இந்தப் படத்தில் லீயின் கார் Golden Court, Jalan Tras Bentong  சந்திப்பிலிருந்து பிரதான சாலைக்கு வெளியேறுவதைக் காட்டுகிறது, அதில் “No Entry” குறியீட்டைக் கொண்டுள்ளது.