பெற்றோர் : தன் மகனிடம் மதம் மாறினால் தேசிய அணியில் சேர முடியும் என்று ஆசிரியர் ஊக்குவித்தார்

கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படிவம் 3 மாணவரை இஸ்லாத்தைத் தழுவ ஊக்குவித்ததாக ஒரு ஆசிரியர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சேரஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜாம் ஹலீம் ஜமாலுடின்(Zam Halim Jamaluddin) மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“வாசன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சிறுவனின் தாயார், வகுப்பு ஆசிரியர் தனது 15 வயது மகனிடம் “மலேசியாவில் உள்ள மைதானங்களுக்குள் முஸ்லிம்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று கூறியதாகக் கூறினார்.

இந்து ஆகமம் அணி மலேசியா சங்கத்தின் தலைவர் அருண் துரைசாமி

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஆசிரியர் வகுப்பிற்காக உருவாக்கிய புலனக் குழுவில் உள்ள தகவல்களை அவரது மகன் காண்பித்தபோது இந்தச் சம்பவம்குறித்து அவர் அறிந்தார்.

“நான் தகவல்களைப் பார்த்தபோது, தேசிய அணியில் சேர விரும்பினால், அவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் என் மகனிடம் கூறியதை நான் கவனித்தேன்.

“பின்னர் அவர் எனது மகனை மதம் மாற ஊக்குவித்தார், மேலும் அவருக்கு இஸ்லாமிய பெயர்களைப் பரிந்துரைக்குமாறு வகுப்பில் கேட்டார்.

“மலேசியாவில் முஸ்லிம்கள் மட்டுமே மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஆசிரியர் கூறியது என்னை மிகவும் குழப்பமடையச் செய்தது,” என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பின்னர் அந்தச் செய்திகளின் நகல்களை வாசன் ஊடகங்களிடம் காண்பித்தார்.

வாசன் கூறுகையில், தானும்,  எனது கணவரும் ஆசிரியரை அழைத்துத் தகவல்குறித்து பேச முயன்றதாகவும், ஆனால் அவர் எங்களின் எண்களைப் பிளாக் செய்ததாகவும் கூறினார்.

சட்டத்திற்கு எதிரானது

கடந்த 6 மாதங்களாக அந்த ஆசிரியர் தனக்கு இஸ்லாம் குறித்து போதித்து வருவதாகத் தனது மகன் தெரிவித்ததாக அவர் கூறினார்.

போலீசில் புகார் அளித்தால் பள்ளி அணியிலிருந்து நீக்கப்படுவாரோ அல்லது குறைந்த மதிப்பெண் வழங்குவாரோ என்ற கவலையில் தனது மகன் இருப்பதாக வாசன் கூறினார்.

பெற்றோருடன் இந்து ஆகம அணி மலேசியா சங்கத் தலைவர் அருண் துரைசாமியும் உடன் இருந்தார்.

“ஆசிரியரின் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அது எதுவாக இருந்தாலும், அவர் மாணவரிடம் பேசியது  கூட்டாட்சி அரசியலமைப்பின் 11 வது பிரிவுக்கு எதிரானது (இது மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது).

“இந்த வழக்கில், சிறுவன் ஒரு மைனர், எனவே அவரது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அவரை மதமாற்றம் செய்ய முயற்சிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் சட்டவிரோதமானது,” என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சு ஆசிரியரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற பெற்றோரின் வேண்டுகோளையும் அருண் எதிரொலித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கும், மாணவர்கள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறார்கள் என்ற வாசன் மற்றும் அருணின் கூடுதல் கூற்றுக்கும் பதிலளிக்க மலேசியாகினி பள்ளியைத் தொடர்பு கொண்டுள்ளது.