மக்கள் தங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) சேமிப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்பதால் B40குழுவுக்கான கூடுதல் வருமான வாய்ப்புகள் உட்பட பல முக்கிய அறிவிப்புகளை அரசாங்கம் விரைவில் வெளியிடும்.
அதே நேரத்தில், ஊதிய வளர்ச்சியை இலக்காகக் கொண்ட 12 வது மலேசிய திட்டத்தின் (12MP) இடைக்கால மதிப்பாய்வின் மூலம் அரசாங்கம் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆராயும் என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார்.
ஏனெனில் “ஊதிய உயர்வுச் சந்தை சக்திகளிடம் விடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் அரசாங்கம் ஒரு தெளிவான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கானவை,” என்று பொருளாதார அமைச்சருடனான உரையாடலின் தொடக்க அமர்வுக்குப் பிறகு அவர் கூறினார்.
மலேசியர்கள் தங்கள் முதுமைக் காலத்தில் சில சேமிப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே வாழ்க்கைச் செலவு, வருமானம் சம்பந்தப்பட்ட உதவி மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் கவனம் செலுத்தப்படும் என்று ரஃபிஸி கூறினார்.
“EPF திரும்பப் பெறுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும், இருப்பினும் சில குடும்பங்களுக்கு இது இப்போதைக்கு உதவக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் செலவு அதிகம்,” என்று அவர் கூறினார்.
நேற்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம், மக்கள் தங்கள் EPF சேமிப்பைத் திரும்பப் பெறாமல், மக்களின் நிதி அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டறியும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றார்.
இதற்கிடையில், மானியத் திட்டங்களை உண்மையிலேயே தேவைப்படும் இலக்குக் குழுக்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் தாக்கத்தைக் குடும்பங்களும் சிறப்பாகக் கையாள முடியும் என்றும் ரஃபிஸி கூறினார்.
“தகுதிக்கான முடிவெடுக்கும் செயல்முறை நடந்து வருகிறது, இது தேசிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும்… வீட்டு வருமானத்தையும் குடும்பங்களின் எண்ணிக்கையையும் நம்மால் தீர்மானிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவை மிகவும் போட்டி நிறைந்த சந்தையாகவும் வணிக நட்பு இடமாகவும் மாற்றும் நம்பிக்கையுடன் வணிகத்தை எளிதாக்குவதற்கான சிறப்பு பணிக்குழு (Pemudah) மேம்படுத்தப்படும் என்று ரஃபிஸி மேலும் கூறினார்.
“அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமது ஜூகி அலியுடன்(Mohd Zuki Ali) சேர்ந்து இத்தளத்தில் நான் தலைமை தாங்குவேன்,” என்று அவர் கூறினார்.