வேலை மோசடிகளில் இருந்து மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும் – பிரதமர்

வெளிநாடுகளில் போலி வேலை வாய்ப்புகளை வழங்கும் சிண்டிகேட்டுகளிடமிருந்து  மலேசியர்களைப் பாதுகாக்க சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மியான்மர் உட்பட வெளிநாடுகளில் சிண்டிகேட்டுகளால்  பலியாகியவர்கள் பலர் இருப்பதாக அவர் கூறினார்.

“ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். மலேசியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும், எளிதில் ஏமாறாமல் இருக்க”

தகவல்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகமும் காவல்துறையும் சட்டங்களை கடுமையாக்குவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, என்று அவர் மலேசிய செய்தியாளர்களிடம் தனது இரண்டு நாள் பணி பயணத்தை முடித்த பின்னர் கூறினார்.

மியான்மருக்குள் நுழைவதாக ஏமாற்றப்பட்டு சைபர் மோசடி சிண்டிகேட்டில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஐந்து மலேசிய வேலை தேடுபவர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் தற்போது பாங்காக்கில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்படுவதற்கு காத்திருக்கிறார்கள்.

வேலை மோசடிகள் குறித்து காவல்துறைக்கு இதுவரை மொத்தம் 262 புகார்கள் வந்துள்ளன. தற்போது கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் 330க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சிண்டிகேட்களில் பெரும்பாலானவை, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேலை விளம்பரங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் பதவிகளை இலாபகரமான சம்பளத்துடன் வழங்குகின்றன என்று கூறி பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுத்துள்ளன.

வேலைக்கு சேர்ந்தவுடன் , அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் அழிக்கப்படும் .  பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்பவராகவும் அல்லது ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் பணியாற்ற  கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

 

 

-FMT